திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு ஒரு வாரம் காவலில் முருகனிடம் 1.50 கிலோ நகைகள் பறிமுதல்

திருச்சி: திருச்சி நகைக்கடைகொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனை கடந்த 26ம்தேதி பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு அழைத்து வந்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். 27ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்தி நீதிமன்றம் அனுமதியுடன் 7 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். லலிதா ஜூவல்லரியில் மொத்தம் 28 கிலோ 750 கிராம் நகைகள் கொள்ளை போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை 24 கிலோ 550 கிராம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 4 கிலோ 200 கிராம் நகைகள் இன்னும் கைப்பற்றப்பட வேண்டும்.

இந்த நகைகள் எங்குள்ளது என்று முருகனிடம் கடந்த 5 நாட்களாக போலீசார் விசாரித்தனர். இதன்பேரில், முருகனை போலீசார் நேற்றுமுன்தினம் திருவாரூரில் உள்ள அவனது வீட்டுக்கு அழைத்து சென்று சோதனை நடத்தினர். அங்கு மேலும் 1.50 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டது. எனவே, இன்னும் 3 கிலோ மட்டும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். இந்நிலையில் முருகனின் 7 நாள் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து முருகனை திருச்சி ஜேஎம் 2 கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் திரிவேணி, வரும் 16ம் தேதி வரை முருகனை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கோசலைராமன் தலைமையிலான போலீசார் முருகனை பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறைக்கு அழைத்து சென்றனர்.

1 கிலோ நகையை பங்கு போட்ட போலீஸ்

நகை கொள்ளை வழக்கில் கைதான சுரேஷை கே.கே.நகர் போலீசார் நேற்று திருச்சி ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி திரிவேணி, வரும் 16ம் தேதி வரை சுரேஷை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சுரேஷை நீதிமன்றத்துக்கு வெளியே அழைத்து வந்தனர். அப்போது வேனில் இருந்து கொண்டு சுரேஷ் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘போலீசார் என்னையும், மணிகண்டனையும் திருவாரூரில் வழிமறித்த போது எனது பங்கு நகையாக மணிகண்டனிடம் இருந்த 5கிலோ 700 கிராமை பறிமுதல் செய்து விட்டனர். ஆனால், அதில் 1 கிலோ நகையை கணக்கில் காட்டாமல் அவர்களே பங்கு போட்டு விட்டனர்’’ என்றான். சுரேஷ் கூறியிருப்பது பற்றி அவர்களை பிடித்த திருவாரூர் எஸ்ஐ, ஏட்டுவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories: