முதல்வர் எடப்பாடியை விமர்சித்த விவகாரம் சீமான் மீது அவதூறு வழக்கு

சென்னை: முதல்வர் எடப்பாடியை மத்திய அரசின் மேஸ்திரி என்று விமர்சனம் செய்த விவகாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான். இவர், கடந்த ஜூலை 14ம் தேதி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்தார். அப்போது அவர், ‘‘இப்போ எது நம்மகிட்ட இருக்கு சொல்லுங்க, எல்லாமே மத்திய அரசு கிட்டதான் இருக்கு, மாநிலம் எதுக்கு, அந்த மாநிலத்தில் ஒரு முதலமைச்சர் இருப்பது எதுக்கு. வேலை ஆட்களை கவனிக்க சும்மா ஒப்புக்கு ஒரு மேஸ்திரி போடுவோம்ல அதுமாதிரி தான் தமிழக முதல்வர், எந்த உரிமையும் நம்மிடமில்லை’’ என்று சீமான் பேசியிருந்தார்.

இந்த பேட்டி, அந்த தொலைக்காட்சியில்  ‘‘மத்திய பாஜ அரசின் மேஸ்திரி போல் தமிழக முதல்வர் செயல்படுகிறார்’’ என்ற தலைப்பில் வெளியாகியது. இந்த பேட்டியில் தமிழக முதல்வரை அவதூறாக பேசியிருப்பதாக கூறி, தமிழக அரசின் சார்பில் அரசு வழக்கறிஞர் கவுரி அசோகன், சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மீது அவதூறு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: