×

ஜெயலலிதா குறித்து விமர்சனம் விஜயகாந்த் மீதான 2 அவதூறு வழக்கு வாபஸ்: தமிழக அரசு நடவடிக்கை

சென்னை: சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு பலத்த மழை பெய்தது. அப்போது செம்பரம்பாக்கம் ஏரி உடைந்து, சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் மக்கள் உணவு, வீடு இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர். அப்போது செம்பரம்பாக்கம் ஏரி எந்தவித அறிவிப்புமின்றி திறக்கப்பட்டதே, மக்களின் இந்த நிலைக்கு காரணம். இதற்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து, அதிமுக அரசுக்கு அவதூறு ஏற்படுத்தும் நோக்கில் கருத்து தெரிவித்திருப்பதாக கூறி விஜயகாந்த் மீது தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இதேபோல் கடந்த 2012, 2013 மற்றும் 2016ம் ஆண்டுகளிலும் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்து பேசியதாக விஜயகாந்த் மீது 4 அவதூறு வழக்குகளும், 2014ம் ஆண்டு பால்வளத்துறை அமைச்சர் ரமணாவை விமர்சித்து பேசியதாக ஒரு வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் மீதான விசாரணை சென்னை, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்தநிலையில், இந்த வழக்குகள் நேற்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஷ்வரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐந்து வழக்குகளையும் திரும்ப பெற்றுக்கொள்வதற்கான அரசாணையை அரசு சிறப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.இதனை பார்த்த நீதிபதி, 5 வழக்குகளில் 2 வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது. மேலும் இரண்டு அவதூறு வழக்குகளில் பத்திரிகைகளையும் சேர்த்துள்ளீர்கள். இவர் மீதான வழக்கை மட்டும் முடித்துவிட்டு, இவர் பேசியதை வெளியிட்ட பத்திரிகைகள் மீது வழக்கு நடத்த முடியுமா என்று கேட்டு, விஜயகாந்த் பேசியதை தான் பத்திரிகைகள் வெளியிட்டுள்ளன. எனவே இதுகுறித்தான முடிவை அரசு தெரிவிக்க வேண்டும் என்று 2 வழக்குகளையும் முடித்து வைக்கவில்லை. இதேபோல் 2016ம் ஆண்டு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அதனை வரும் 16ம் தேதி ஒத்திவைத்தார்.

Tags : Vijayakanth Jayalalithaa Vijayakanth ,withdrawal ,Tamil Nadu , Criticism , Jayalalithaa Vijayakanth , Tamil Nadu government, action
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...