தமிழ்மொழி வளர்ச்சிக்கென உருவாக்கப்பட்ட உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்பு : முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

சென்னை : தமிழ் வளர்ச்சித்துறைக்கென உருவாக்கப்பட்ட உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தி பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டதற்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி ஆட்சியில் தமிழ் ‘வளர்ச்சித்துறை’ தமிழ் ‘அழிப்புத் துறை’யாகவே தற்போது மாறிவிட்டிருகிறது. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சில் வேல் கொண்டு பாய்ச்சிய உணர்வை ஏற்படுத்தி இருக்கின்றது. உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை எம்.பில் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கான இந்தி மொழி பயிற்சியை தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்து அதற்காக ஆறு லட்ச ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

அத்தோடு மட்டும், நிறுத்திக் கொள்ளாமல் தமிழில் உயர்கல்வி பயிலும் இம்மாணவர்கள் இந்தி மொழியைக் கற்றுக் கொண்டால் வேலை வாய்ப்பு உருவாகும் என்ற பழைய புளித்துப் போன கதையை மீண்டும் திருவாய் மலர்ந்தருளி புளகாங்கிதம் அடைந்திருக்கின்றார், ‘‘தமிழ் அழிப்பு மற்றும் பண்பாட்டு சிதைவு” அமைச்சராக தன்னை உருமாற்றிக் கொண்டிருக்கின்ற பாண்டியராஜன், இந்த ஒரு வருடப் பயிற்சியும் சென்னையில் இயங்கி வரும் ‘இந்தி பிரச்சார சபா” மூலமாக நடத்தப்பட்டு சான்றிதழும் வழங்கப் பெறும் என்ற தகவல் கடும் கண்டனத்திற்குரியதாகும். தனிநாயகம் அடிகளாரின் பெருங்கனவில் உருவாகிப் பேரறிஞர் அண்ணா அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, ஒப்பற்ற தலைவர் கலைஞர் அவர்களால் செம்மைப்படுத்தப்பட்ட தமிழுக்கே உரிய ஒரு அமைப்புதான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகும். மொழிப் பிரச்னையில் தமிழகம் ஒரு கந்தக பூமி என்பதை மறந்து தமிழக மக்களின் உணர்வுகளோடு மீண்டும் சீண்டி விளையாடத் துவங்கியிருக்கும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: