வில்லியம்சன், டெய்லர் அபார சதம் 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது : தொடரை வசப்படுத்தியது நியூசிலாந்து

ஹாமில்டன்: இங்கிலாந்து அணியுடனான 2வது டெஸ்டில், கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் ராஸ் டெய்லரின் அபார ஆட்டத்தால் டிரா செய்த நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. செடான் பார்க் மைதானத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 375 ரன் குவித்து ஆல் அவுட்டானது. லாதம் 105, டெய்லர் 53, வாட்லிங் 55, டாரில் மிட்செல் 73 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 476 ரன் குவித்து முன்னிலை பெற்றது. கேப்டன் ஜோ ரூட் 226, பர்ன்ஸ் 101, போப் 75 ரன் விளாசினர்.

இதைத் தொடர்ந்து, 101 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணி 4ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 96 ரன் எடுத்திருந்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 37 ரன், ராஸ் டெய்லர் 31 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். பொறுப்புடன் நிதானமாக விளையாடிய இருவரும் சதம் அடித்து அசத்த, நியூசிலாந்து 2 விக்கெட் இழப்புக்கு 241 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் டிராவில் முடிந்தது.

வில்லியம்சன் 104 ரன் (234 பந்து, 11 பவுண்டரி), டெய்லர் 105 ரன்னுடன் (186 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 2 போட்டிகள் கொண்ட தொடரை நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருதும், நியூசிலாந்தின் நீல் வேக்னர் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

Related Stories: