ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தமிழக அணி கேப்டனாக விஜய் ஷங்கர் நியமனம்

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தமிழக அணியின் கேப்டனாக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். 2019-20 ரஞ்சி டிராபி சீசன் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 38 அணிகள் களமிறங்குகின்றன. இத்தொடரின் முதல் 2 லீக் ஆட்டங்களுக்கான தமிழக அணி நேற்று அறிவிக்கப்பட்டது. முதல் முறையாக ஆல் ரவுண்டர் விஜய் ஷங்கர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தலைமையிலான அணியில் அனுபவ வீரர்கள் ஆர்.அஷ்வின், முரளி விஜய், தினேஷ் கார்த்திக் உட்பட மொத்தம் 15 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனவரியில் இந்திய அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளதால், ஆர்.அஷ்வினுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படவில்லை. எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழக அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் கர்நாடகாவையும் (டிச. 9-,12), 2வது லீக் ஆட்டத்தில் இமாச்சல் அணியையும் சந்திக்கிறது. தமிழக அணி: விஜய் ஷங்கர் (கேப்டன்), ஆர்.அஷ்வின், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), முரளி விஜய், பாபா அபராஜித், முருகன் அஷ்வின், நாராயண் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), கே.முகுந்த், அபினவ் முகுந்த், டி.நடராஜன், சாய் கிஷோர், ஷாருக் கான், மணிமாறன் சித்தார்த், அபிஷேக் தன்வார், கிருஷ்ணமூர்த்தி விக்னேஷ்.

Related Stories:

>