புதிதாக மாவட்டங்கள் உருவாக்கபடுவதால் வளர்ச்சி ஏற்படுமா?

சமீபத்தில் தென்காசி, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், செங்கல்பட்டு என புதிதாக ஐந்து மாவட்டங்களை உருவாக்கி, மாவட்டங்களின் எண்ணிக்கையை 37 ஆக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு.கடந்த ஜனவரி மாதம் விழுப்புரத்திலிருந்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என சட்டசபையில் தெரிவித்திருந்தார் முதல்வர். பின்னர், ஜூலையில் திருநெல்வேலியை இரண்டாகப் பிரித்து தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும், காஞ்சிபுரத்தைப் பிரித்து செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டமும் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில். சுதந்திர தினத்தன்று வேலூர் மாவட்டமானது வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மூன்று மாவட்டங்களாகப் பிரிக்கப்படும் என்றார். இப்போது புதிதாக உருவான மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள், கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு முதலாவதாக தென்காசி திறப்பு விழா கண்டுள்ளது. ஆரம்பத்தில் சென்னை மாகாணமாக இருந்தபோது ெமாத்தம் 13 மாவட்டங்களே இருந்தன. 1966ம் ஆண்டிலிருந்து நிர்வாகக் காரணங்களுக்காக ஒவ்வொரு மாவட்டமாக பிரிக்கப்பட்டது. கடைசியாக 2009ல் கோவையிலிருந்து திருப்பூர் உருவாக்கப்பட்டது.

இப்படி மாவட்டங்கள் பிரிப்பது நிர்வாகக் காரணங்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் எனக் கூறப்பட்டாலும் அரசியல் காரணங்களே பிரதானமாக உள்ளதென சமூக ஆர்வலர்களும், முன்னாள் அதிகாரிகளும் கூறுகின்றனர்.  உண்மையில் மாவட்டங்களாகப் பிரிப்பதால் அந்தந்தப் பகுதி

யின் வளர்ச்சி அதிகரிக்குமா? ‘‘வளர்ச்சிக்காக பிரிக்கிறாங்கனு நான் நினைக்கல. இதை மக்களின் நிர்வாக வசதியாதான் பார்க்கணும். இது நல்ல விஷயம்...’’ என்கிறார் சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ.

‘‘ஒரு மாவட்டத்துல அந்த மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தை ஒரு மணி நேரத்துக்குள்ள அடைகிற மாதிரி இருக்கணும். ஆனா, இன்னமும் நிறைய இடங்கள்ல இரண்டு, மூணு மணி நேரம் போகிற மாதிரியெல்லாம் இருக்கு. வேலூர் மாவட்டம் அப்படியான ஒரு பரப்பு கொண்டது. எனக்கு திருவாரூர் பக்கத்துல பொய்கைநல்லூர்னு ஒரு கிராமம். அப்ப எங்க ஊர் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமா இருந்துச்சு. எங்க ஊரிலிருந்து மாவட்டத் தலைநகரான தஞ்சாவூருக்கு 60 கிமீ போகணும். பயணமே மூணு மணி நேரம் ஆகும். போயிட்டு வரவே ஒருநாளாகிடும்.

அந்நேரம், முதல்வர் ெஜயலலிதா தஞ்சாவூரிலிருந்து நாகப்பட்டிணம் மாவட்டத்தைப் பிரிச்சார். நாங்க நாகப்பட்டிணத்துடன் இணைக்கப்பட்டோம். பிறகு, மூணு மணி நேரம் என்பது பாதியா குறைஞ்சது. அப்புறம், திருவாரூர் மாவட்டம் உருவானதும் அரைமணி நேரமானது.

இப்ப கலெக்டரைப் பார்க்கறதோ, எஸ்பியைச் சந்திக்கிறதோ ரொம்ப ஈஸியாகிடுச்சு. அந்த மாதிரி மக்கள் அருகில் அரசாங்கம் இருக்கணும். அதற்காக நூறு, இருநூறு கோடி ஒதுக்கி மாவட்டங்களைப் பிரிக்கிறதுல எந்தத் தவறுமில்ல.மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்கள் கட்டவும், மற்ற தலைமை அலுவலகங்கள் அமைக்கவும், குடியிருப்புகள் ஏற்படுத்தவும் தனிச் செலவுகள் ஆகும்தான். ஆனா, எல்லாமே மக்களுக்காகத்தானே!

ஓர் உதாரணம் சொல்றேன். ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டமாக இருந்தப்ப மாவட்டத்திலுள்ள சுமார் முந்நூறு பள்ளிகளை ஆய்வு செய்ய தினமும் ஒரு பள்ளினு மாவட்ட கல்வி அதிகாரிக்கு ஒரு வருஷமாச்சு.ஆனா, மாவட்டங்களைப் பிரிக்கும்போது அதில் நூறு பள்ளிகள்தான் வரும். அப்ப வருஷம் மூணு முறை ஆய்வு செய்யலாம்தானே! பள்ளிகளும் வளர்ச்சி பெறும் இல்லையா?! இந்தமாதிரியான வளர்ச்சிகள் உடனே தெரியாது.

ஒரு பத்து வருஷம் கழிச்சு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்...’’ என்கிற சிவ.இளங்கோ, இதில் அரசியல் செய்யப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார்.

‘‘தஞ்சாவூர்ல இருந்து திருவாரூர் மாவட்டமாகப் பிரிக்க கலைஞர் நினைச்சார். ஆனா, 1991ல் ஜெயலலிதா முதல்வரானவுடன் அதை நாகப்பட்டிணமாக அறிவிச்சார். அப்புறம், கலைஞர் 1997ல் திருவாரூர் மாவட்டத்தை உருவாக்கினார்.

அந்நேரம், திருவாரூைர முதல் மின்னணு மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக மாத்தினார். மீண்டும் ஜெயலலிதா வந்ததும் இதை நாகப்பட்டிணத்துடன் இணைக்க நினைச்சார். ஆனா, முதல் இ-கலெக்டரேட்னு பதிவாகிடுச்சுனு அதிகாரிகள் சொன்னதால் மாற்றாமல் விட்டார்...’’ என்கிறார். ஆனால், இப்படி மாவட்டங்களாகப் பிரிப்பதைவிட மாவட்ட நிர்வாகத்தை முதலில் சீரமைக்க வேண்டுமென வேண்டுகோள் வைக்கிறார் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி.தேவசகாயம்.

‘‘மாவட்டங்களைப் பிரிக்கிறதால மக்களுக்கு சில அசவுகரியங்கள் குறையுமே ஒழிய எந்த வளர்ச்சியும் ஏற்படாது. இதெல்லாம் லோக்கல் அரசியல்வாதிகள் வளர்றதுக்குதான் செய்யப்படுது. மத்தபடி இதுல எந்த நன்மையும் இருப்பதா தெரியல.முதல்ல, தமிழ்நாட்டின் மாவட்ட நிர்வாக முறை சரியில்ல. 37 கலெக்டர்களும் மாநில அரசுடன் எந்தத் தொடர்பும் இல்லாமல் இருக்காங்க. அதுபோல ஒரு கலெக்டரை மேற்பார்வையிடவோ, கண்காணிக்கவோ இங்க யார் இருக்கா?

தலைமைச் செயலாளர் நேரடியா செய்ய முடியுமானு கேட்டால் முடியாது. நிர்வாகச் செயலாளர் அவரின் துறையை மட்டுமே கவனிப்பார். மாவட்ட கலெக்டருக்கு நாலு பொறுப்புகள் இருக்கு. ஒண்ணு, சட்டம் மற்றும் ஒழுங்கு. இதுக்கு உள்துறைச் செயலர்தான் தலைமை. அவர் சென்னையில இருக்கார்.

இரண்டாவது வருவாய்த் துறை. அப்புறம் வளர்ச்சித் துறை. இதுல சாலை, போக்குவரத்து, பொதுப்பணினு பல துறைகள் வரும். இதற்கான மேலதிகாரிகள் எல்லோருமே சென்னையில்தான் இருக்காங்க. அப்ப கலெக்டர் யார்கிட்ட போய் வழிகாட்டல் கேட்பார்? பொதுவா, கலெக்டர்கள் எல்லாம் இளைஞர்களா, பத்தாண்டு அனுபவங்கள் உள்ளவங்களா இருப்பாங்க. அவங்களுக்கு போதுமான வழிகாட்டல் இருக்காது.

ஒருசில விஷயங்களுக்காக மட்டுமே மேலதிகாரிகள் சென்னையில இருந்து வர்றாங்க. அதுவும் சுற்றுலா மாதிரி வந்துட்டுப் போவாங்க.

சில சமயங்கள்ல கலெக்டர் சொல்றதை சில துறைகளின் மாவட்ட அதிகாரிகள் கேட்கமாட்டாங்க. இதனால், அரசு திட்டங்கள் எளிதில் நிறைவேறாது.மக்களைப் பாதிக்கும் 75 சதவீத ஊழல் மாவட்ட அளவில்தான் நடக்குது. அதைக் கட்டுப்படுத்த கலெக்டருக்கு ஒரு கண்ட்ரோல் இல்லை. அவரால் சரியா செயல்பட முடியாத நிலை இருக்கு. இந்த வெற்றிடத்துக்குள்ளதான் அரசியல்வாதிகள் நுழைஞ்சிடுறாங்க.

இப்ப போலீஸ் துறைய எடுத்துக்கங்க. மாவட்டத்துக்கு ஒரு எஸ்பி இருக்கார். மூன்று மாவட்ட எஸ்பிக்களைக் கவனிக்கும் பொறுப்பும், வழிகாட்டும் பொறுப்பும் ஒரு டிஐஜிகிட்ட இருக்கு. அவர் தொடர்பு கொள்ள மண்டலத்துக்கென ஒரு ஐஜி நியமிக்கப்பட்டு இருக்கார். எந்த ஒரு பிரச்னை வந்தாலும் இங்கேயே முடிவெடுக்கிறாங்க. ஆனா, கலெக்டருக்கு ஒருத்தரும் இல்லை. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துல ஒரு ஏடிஜிபி, நாலு ஐஜி, ஏழெட்டு டி.ஐ.ஜினு எல்லோரும் இருந்தாங்க. ஆனா, ஐஏஎஸ் அதிகாரியா ஒரே ஒரு கலெக்டர்தான் இருந்தார். விளைவு என்னாச்சுனு நாடே பாத்துச்சு.

அதனால, துறை அளவுல ஒரு சீனியர் அதிகாரியை நியமிச்சு வழிகாட்டவும், மேற்பார்வையிடவும் செய்யணும். வடஇந்தியாவுல மேற்பார்வையிட கமிஷனர் சிஸ்டம் இருக்கு. இந்த முறை இங்க இல்லாததாலேயே மக்கள் மத்தியில் அதிகளவு போராட்டங்கள் நடக்குது. அதனால, நிர்வாகத்தைச் சீரமைச்சால்தான் மாவட்டங்களைப் பிரிக்கிறது அர்த்தமுள்ளதா இருக்கும்; வளர்ச்சியும் ஏற்படும்’’ என்கிறார் எம்.ஜி.தேவசகாயம்!            

பேராச்சி கண்ணன்

Related Stories: