×

சென்னை, புறநகரில் 3 நாட்களாக தொடர் மழை நூற்றுக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது

˜* இரவில் தூங்க முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் ˜ * வடிகால்கள் பராமரிப்பில் அதிகாரிகள் மெத்தனம்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை விடாமல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. திருவொற்றியூர் கார்கில் நகர், ராஜாஜி நகர், கலைஞர் நகர் போன்ற பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பலரது வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.தெருவோரங்களில் மின்கம்பங்களை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளதால் மின் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூரில் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்களை மாநகராட்சி அதிகாரிகள் சரியாக பராமரிக்கவில்லை. இதனால் பல இடங்களில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் சீராக போக முடியாமல் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்து விடுகிறது.
வழக்கத்தைவிட அதிகமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்களை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் எந்த முயற்சியும் எடுக்காததால் தற்போது நூற்றுக்கணக்கான வீடுகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து இதேபோல் மழை நீடித்தால் திருவொற்றியூர் மேற்கு பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகளிலும் மழைநீர் புகும் அபாயம் உள்ளது,’’ என்றனர்.

வெள்ளக்காடான சாலைகள்: தாம்பரம் மற்றும் சுற்று வட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. செம்பாக்கம் ஏரியில் இருந்து நன்மங்கலம் ஏரிக்கு செல்லும் மழைநீர் செம்பாக்கம் - திருமலை நகர் பகுதியில் சாலை முழுவதும் சூழ்ந்து சுமார் 4 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.சேலையூர் - அகரம்தென் பிரதான சாலையில் முடிச்சூர் பகுதியில் மழைநீர் ஆங்காங்கே சாலைகளில் தேங்கியது. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது.குடியிருப்பில் கழிவுநீர் தேக்கம்: அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட கொரட்டூரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள சென்ட்ரல் அவின்யூ, வடக்கு அவின்யூ, 27 முதல் 29 வரை தெருக்கள், கண்ணகி தெரு, தெற்கு ரயில்வே ஸ்டேசன் சாலை, சீனிவாசன் நகர், சிவலிங்கபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மேற்கண்ட பகுதிகள் அனைத்தும் தாழ்வான பகுதி என்பதால், மேற்கண்ட பகுதிகளில் மூன்று தினங்களாக தொடர்ந்து கொட்டிய மழையால் தண்ணீர் செல்ல வழியின்றி சாலைகளில் தேங்கி நிற்கிறது. இதோடு மட்டுமல்லாமல், மழை நீருடன் கழிவு நீரும் கலந்து ஆங்காங்கே நிற்கிறது. இதன் காரணமாக குடியிருப்புவாசிகள் வீட்டை விட்டு வெளியே வரமுடியவில்லை.

இதுகுறித்து குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘‘கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரூ.16 கோடியில் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்த கால்வாய், தொடங்கத்தில் 30 அடியாகவும், முடிவில் 10அடி அகலமாக உள்ளது. இதனால், தற்போது பெய்து வரும் கனமழையால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, தெருக்கள், குடியிருப்பில் புகுந்தது. இந்த தண்ணீர் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது,’’ என்றனர். மரம் விழுந்தது: திருவிக நகர் நாகம்மாள் தெருவில் பலத்த மழை காரணமாக அங்கிருந்த 30 ஆண்டுகால பழமை  வாய்ந்த மரம் நேற்று காலை 6 மணியளவில் வேரோடு சாய்ந்தது. இதுகுறித்து  அப்பகுதி மக்கள் திருவிக நகர் மண்டல அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள்  சுமார் 3 மணி நேரம் போராடி அந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி  அப்பகுதியிலிருந்து அகற்றினர்.

முகாமில் தஞ்சம்:  வில்லிவாக்கம்  பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு பெய்த கன மழையில் சத்யா  நகர்  உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் உள்ள தெருக்கள் மற்றும்  வீடுகளில்  மழைநீர் புகுந்தது. இதனால் உடமைகள் நனைந்து நாசமானதுடன், மக்கள் வீட்டைவிட்டு வெளியேற  முடியாமல்  அவதிப்பட்டனர். தகவலறிந்து வந்த மாநகராட்சி ஊழியர்கள், அவர்களை பத்திரமாக மீட்டு,   வில்லிவாக்கம், சிங்காரவேலர் அரசு பள்ளி வளாகத்தில் பாதுகாப்பாக   தங்கவைத்தனர். அவர்களுக்கு தேவையான பொருட்கள் மற்றும் உணவு வழங்கினர்.

மரக்கிளை விழுந்து மண்டை உடைந்தது
அண்ணாநகர் மேற்கு  ‘கி’ பிளாக் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி காமாட்சி (35), நேற்று மதியம் தனது தோழி நீலா என்பவருடன் மொபட்டில் அண்ணா நகர் மேற்கு ரோடு  மில்லினியம் பார்க் அருகே சென்றபோது, அங்கிருந்த  மரத்தின் கிளை உடைந்து காமாட்சி தலையில் விழுந்தது. இதில், மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். அவரை மீட்டு  திருமங்கலத்தில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Tags : hundreds ,rains ,suburbs ,homes ,Chennai. ,Showers , Showers, Chennai ,suburbs , flooded
× RELATED குடகனாற்றில் தண்ணீர் திறந்து விடுவதை...