×

நித்தியானந்தா ஆசிரமத்திற்கு நிலம் குத்தகைக்கு விட்ட விவகாரம் டெல்லி பப்ளிக் பள்ளி அங்கீகாரம் ரத்து: சிபிஎஸ்இ நிர்வாகம் நடவடிக்கை

அகமதாபாத்: சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்திற்கு நிலம் ஒதுக்கிய விவகாரத்தில் விதிமீறப்பட்டதாக கூறி, அகமதாபாத்தில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளியின் அங்கீகாரத்தை சிபிஎஸ்இ நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் புறநகரில் உள்ள ஹிராபூரில் டெல்லி பப்ளிக் பள்ளி (டி.பி.எஸ்) செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் வளாகத்தில், சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தாவுக்கு குத்தகைக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அவர்கள், அந்த நிலத்தில் ஆசிரமங்களை கட்டி பயன்படுத்தி வந்தனர். தற்போது, அந்த ஆசிரமத்தில் சிறுமிகள், பெண்கள் கட்டாயப்படுத்தி அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களில் சிலர் கடத்தப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்தது. அதுதொடர்பான வழக்குகள் அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

குற்றம்சாட்டப்பட்ட சாமியார் நித்தியானந்தா உள்ளிட்ட 7 பேர் மீது சிறப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வரும் நிலையில், நித்தியானந்தா தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஆசிரமத்திற்கு நிலத்தை குத்தகைக்கு விட்ட விவகாரம் ெதாடர்பாக விதிமீறல்கள் நடந்ததாக கூறி, அம்மாவட்ட கல்வித்துறை கடந்த வாரம் ஆய்வு நடத்தியது. அதனடிப்படையில் குஜராத் மாநில அரசு, டெல்லியில் உள்ள மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திற்கு (சிபிஎஸ்இ) அறிக்கை சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பள்ளியின் அங்கீகாரம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆசிரமம் மூடல் சீடர்கள் வெளியேற்றம்
நித்தியானந்தா ஆசிரமத்துக்கு பள்ளியை குத்தகைக்கு விட்ட புகாரை தொடர்ந்து டெல்லி பப்ளிக் பள்ளியின் உரிமம் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியது. அதனால், ஆசிரமத்தில் இருந்த நித்தியானந்தாவின் சீடர்கள் மற்றும் அங்கு பணியாற்றுபவர்கள் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள், வாகனங்கள் மூலம் வேறொரு ஊருக்கு மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : CBSE Land of Leasing ,Nityananda Ashram Cancellation of Delhi Public School Accreditation , Leasing , Nityananda A, Delhi Public School,administration action
× RELATED ஆந்திராவில் வினோதம் ரதி மன்மதன்...