×

இ-சிகரெட் தடை மசோதா நிறைவேற்றம்

புதுடெல்லி: நிகோடின் கலந்த ரசாயனத்தை எலக்ட்ரானிக் கருவி மூலம் சூடாக்கி அதன் புகையை உள்ளிழுக்க பயன்படுவதுதான் இ-சிகரெட். இவற்றை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் அபாயம் உள்ளதால், இவற்றுக்கு தடை விதிக்க கடந்த செப்டம்பர் மாதம் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி இ-சிகரெட் உற்பத்தி, வியாபாரம், போக்குவரத்து, சேமிப்பு, விளம்பரம் வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது. இதை சட்டமாக்குவதற்கான மசோதா மக்களவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா நேற்று மாநிலங்களவைக்கு வந்தது. புகையிலை நிறுவனங்களின் வற்புறுத்தல் காரணமாக இ-சிகரெட் தடை சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்ததாகவும், இதேபோல் வழக்கமான சிகரெட் மற்றும் புகையிலைக்கு மத்திய அரசு தடை விதிக்க வேண்டும் என இந்த விவாதத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கூறினர்.இதற்கு பதில் அளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், ‘‘நேர்மையான நோக்கத்துடன் இந்த மசோதாவை கொண்டு வந்துள்ளோம். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. புகையிலைப் பொருட்களுக்கு ஒட்டுமொத்தமாக தடைவிதித்தால், இந்த பூமியில் அதிகம் மகிழ்ச்சியடையும் நபராக நான் இருப்பேன்’’ என்றார். அதன்பின் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.இதேபோல் கார்ப்பரேட் வரி சட்ட திருத்த மசோதாவும் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.Tags : E-cigarette, ban, Bill passed
× RELATED வேளாண் சட்ட மசோதா நகலை கிழித்து போராட்டம்