×

ராட்சத மரங்கள் விழுந்தன, பாறைகள் உருண்டன கொடைக்கானல், தேனி, நீலகிரியில் மண்சரிவு: பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் அவதி

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கொடைக்கானல் - வத்தலக்குண்டு பிரதான சாலையில், பெருமாள் மலை அருகே திடீரென ராட்சத மரம் சாலையின் குறுக்கே விழுந்தது.  இதனால் மலைச்சாலையில் போக்குவரத்து அடியோடு தடைபட்டு, பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நெடுஞ்சாலைத்துறையினர், வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர் சென்று, கொட்டும் மழையில் இயந்திரங்கள் மூலம் மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் போக்குவரத்து சீரானது. இதேபோல் கொடைக்கானல் - பூம்பாறை சாலையில் குண்டாறு அருகே சாலையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்து, மலைக்கிராம மக்கள்  பெரிதும் அவதிப்பட்டனர்.

அந்தரத்தில் தொங்கும் சாலை: கொடைக்கானல் நகராட்சிக்கு உட்பட்ட உகார்தே நகரில், தாங்கு சுவருடன் ஆன சாலையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கனமழை காரணமாக இந்த தாங்கு சுவர் சரிந்து விழுந்ததில் சாலை அந்தரத்தில் தொங்குகிறது. இதனால் வாகன போக்குவரத்து அடியோடு தடைபட்டுள்ளது.  தேனி: தேனி மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் அணைகள், கண்மாய்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. தொடர் மழையால் பெரியகுளம் அருகே போடிநாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட அகமலை மலைக்கிராம சாலையில் நேற்று முன்தினம் ராட்சத பாறை உருண்டு விழுந்தது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது.  சின்னூர், பெரியூர் உட்பட 8 மலைகிராம மக்கள் தலைச்சுமையுடன் நடந்தே பெரியகுளத்துக்கு செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனர்.

இதேபோல் பெரியகுளம் அருகே  கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப்பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.  தொடர்மழையால் சோத்துப்பாறை அணையிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறுகிறது. இந்த தண்ணீர் ஓடும் வராகநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர். சின்னமனூர் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள ஹைவேவிஸ் மலைச்சாலையில் அடுக்கம்பாறை அடுத்த தமிழன்காடு பகுதியில் நேற்று திடீரென மண் சரிவு ஏற்பட்டது. மரங்களும் வேரோடு சாய்ந்து நடுரோட்டில் விழுந்தன. இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை வெட்டியும் பாறைகளுடன் கூடிய மண்ணை அப்புறப்படுத்தியபிறகு போக்குவரத்து சீரானது.

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் ேநற்று முன்தினம் முதல் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை முதல் மழையின் தாக்கம் அதிகரித்துள்ளது. குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் சில இடங்களில் ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

60 மீட்பு படை வீரர்கள்  கோவை, குன்னூருக்கு விரைவு:
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, கோவை, நீலகிரி, கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்குள்ளாகி உள்ளனர். கோவையில்  நடூர் பகுதியில் நேற்று அதிகாலை சுவர் இடிந்து விழுந்து 2 குடும்பங்களை சேர்ந்த 17 பேர் பலியானார்கள். இதையடுத்து, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் உள்ள தேசிய பேரிடர் மீட்பு படை மையத்தில் இருந்து இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், மார்கனி தலைமையில் தலா 30 பேர் கொண்ட 2 குழுவினர் என மொத்தம் 60 மீட்பு படைவீரர்கள் நேற்று டிரக் மூலம் கோவை மாவட்டம் நடூர் பகுதிக்கும், நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிக்கும் விரைந்துள்ளனர்.


Tags : Kodaikanal ,Theni ,Nilgiris Giant ,Nilgiris , Dindigul district, Kodaikanal, rain, landslides
× RELATED மரங்களில் சரசரவென ஏறும் கேரள சதுப்பு நிலங்களில் வலம் வரும் புதிய நண்டு