×

திருச்செங்கோடு அருகே கந்துவட்டி கொடுமையால் மனைவி, மகளுடன் ரிக் அதிபர் தற்கொலை: உருக்கமான கடிதம்

திருச்செங்கோடு: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் கூத்தம்பூண்டி சாயக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(54). ரிக் அதிபரான இவரது மனைவி நிர்மலா(47). இவர்களது மகன் நவீன்குமார்(24) பிஎஸ்சி அக்ரி முடித்து விட்டு, மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் தங்கி ரிக் தொழிலை கவனித்து வருகிறார். மகள் சௌம்யா(21) கோவையில் உள்ள சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இதனிடையே, மோகனுக்கு ரிக் தொழிலில் பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதை சமாளிக்க, கடன் வாங்கி மாணிக்கம்பாளையத்தில் பெரிய அளவில் மளிகை கடை நடத்தினார். ஆனால், அதிலும் நஷ்டம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். அதிலும் போதிய வருமானம் கிடைக்காததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.   

இந்நிலையில், கடன் கொடுத்த நிதி நிறுவனத்தார் நிலத்தை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார். இதுபற்றி விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த மகள் செளமியாவிடமும் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில், மோகன், நிர்மலா, சௌமியா ஆகிய மூவரும், விஷ மாத்திரையை பொடி செய்து குடித்தனர். உயிருக்கு போராடிய நிலையில் மோகன் தனது தம்பிக்கு போன் செய்து கூறியுள்ளார். அவர் உடனடியாக வந்து கதவை உடைத்து சென்று பார்த்தபோது, நிர்மலா இறந்து கிடந்தார். உயிருக்கு போராடிய மோகன், சௌம்யாைவ மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். வழியிலேயே மோகனும், ஈரோடு தனியார் மருத்துவமனையில் சௌமியாவும் இறந்தனர். மகன் வெளியூரில் இருந்ததால் தப்பினார்.  தகவல் அறிந்து வேலகவுண்டன்பட்டி போலீசார் சென்று மோகன் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘கடன் சுமை அதிகரித்து விட்டது.

அதனை அடைக்க முடியாததால் தற்கொலை செய்து கொள்கிறோம். என் மகனிடம் யாரும், எதையும் கேட்க வேண்டாம். அவன் விருப்பப்படி வாழட்டும்,’ என எழுதியிருந்தது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகளவில் கந்துவட்டி தொழில் நடக்கிறது. முதலில் வற்புறுத்தி கடன் கொடுத்துவிட்டு சொத்துக்களை பறிப்பதும் ஆட்களை வைத்து மிரட்டுவதும் தொடர்கதையாக உள்ளது. மோகனையும் அதுபோல கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாலேயே அவர், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என தெரிகிறது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags : Suicide ,Thiruchengode Rick Chancellor , Thiruchengode, misconduct, wife, daughter, Rick Chancellor commits suicide
× RELATED மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் உதவி ஆய்வாளர் தற்கொலை