×

2024-ம் ஆண்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அனைவரும் வெளியேற்றப்படுவார்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் அமித்ஷா உறுதி

ராஞ்சி: இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய அனைவரும், 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய குடிமக்கள் பதிவேட்டைப் பயன்படுத்தி, வெளியேற்றப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில், டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டமாக வாக்குப் பதிவுகள் நடைபெறுகின்றன. அனைத்து வாக்குகளும் டிச. 23ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முதற்கட்டமாக கடந்த 30-ம்  தேதி சத்ரா, கும்லா, பிஷ்னுபூர், லோகர்தாகா, மணிகா, லதேஹர், பாங்கி, தால்டோகஞ்ச், பிஷ்ராம்பூர், சாதாரோர், ஹூசைனியாபாத், கார்வா மற்றும் பகவந்த்பூர் ஆகிய 13 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை நிறைவடைந்த  முதற்கட்ட தேர்தலில் 62.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பெண்கள் அதிகளவில் ஓட்டளித்தனர்.

இந்த தேர்தலில், பாஜ தனித்தும், காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முன்னேற்ற முன்னணி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிடுகின்றன. ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் 6,   ஜேஎம்எம் 4, ஆர்ஜேடி 3 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. பாஜக 12 தொகுதிகளிலும் ஹூசைனியாபாத்தில் வினோத்குமார் சிங்கை ஆதரித்தும் களத்தில் நிற்கிறது.
 
இந்நிலையில், மத்திய அமைச்சரும் பாஜக தலைவருமான அமித் ஷா, ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாய்பாசா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, தேசிய குடிமக்கள் பதிவேடு  நடைமுறைப்படுத்துவதன் மூலம், இந்தியாவிற்குள் ஊடுருவிய அனைவரும் 2024- ம் ஆண்டுக்குள் வெளியே தூக்கி எறியப்படுவார்கள் என்று தெரிவித்தார்.

நாட்டிற்குள் சட்டவிரோத குடியேறியவர்களை அடையாளம் காணும் விதத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு முறை, முதல்கட்டமாக அசாம் மாநிலத்தல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே போன்று அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்தப்படும்  என்று அமித்ஷா ஏற்கனவே அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, சக்ராதர்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித்ஷா, ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ரகுபார் தாஸ் தலைமையிலான அரசுகள்,  ஜார்க்கண்டிலிருந்து நக்சலைட்டுகளை ஒழித்து, மக்களை வளர்ச்சிப் பாதை நோக்கி  இட்டுச்சென்றதாக தெரிவித்தார். பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. 


Tags : intruders ,Amit Shah , All illegal intruders will be expelled by 2024: Home Minister Amit Shah
× RELATED டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்...