உலகின் ஆணிவேர்

நன்றி குங்குமம் முத்தாரம்

118 நாடுகளில் 1.37 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் விரிந்திருக்கிறது மாங்குரோவ் காடுகள். இதில் 35 சதவீத காடுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன. இந்த அழிவு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாங்குரோவ் காடுகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் மனித இனமே இருக்கிறது.

வங்காளத்திலுள்ள சுந்தர வனக் காடு, ஒரிசாவிலிருந்து ஆந்திரா வரை நீண்டு கிடக்கும் கோதாவரி கிருஷ்ணா மாங் குரோவ் காடு, கேரளாவின் கண்ணூர் காடு, தமிழ்நாட்டின் பிச்சாவரம் ஆகியவை இந்தியாவின் முக்கிய மாங்குரோவ் காடுகள்.

நிலம் என்றும் சொல்ல முடியாது, நீர்  என்றும் விட்டுவிட முடியாது. இப்படியான நிலையில்  சில பகுதிகள் இருக்கும். அங்கே மிக வளமான, தனித்துவமிக்க சுற்றுச்சூழல் நிலவும்.

ஏரிக்கு அருகே தண்ணீரால் அடித்துக் கொண்டு வரப்பட்ட வண்ட லால் இது உருவாகி இருக்கலாம் அல்லது சமவெளியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதன் பின் உருவான கோரை, நாணல் போன்றவற்றாலும் இது போன்ற காடுகள் தோன்றியிருக்கலாம். ஆப்ரிக்காவிலும், ஆசியாவிலும் இப்படி பல சதுப்பு நிலங்களைக் காண முடியும்.

பெரும்பாலான ஈர நிலங்கள் கடற்கரையோரங்களிலும், நதி முகத்துவாரங்களிலுமே உள்ளன. ஓத இறக்கம் என்று சொல்லப்படுகிற கடலின் இடைவிடாத பொங்கி வடிதலாலும், அடிக்கடி பெருக்கெடுக்கும் வெள்ளத்தாலும் இந்தப் பகுதிகளில் வித்தியாசமான பள்ளங்கள் உருவாகின்றன. இப்பள்ளங்களில் ஆறும் கடலும் வண்டலை உணவாகக் கொண்டுவந்து கொட்டுகின்றன.

இதனால் ஈர மண் நிறைந்த தரைமட்டங்கள் ஏற்படுகின்றன. இந்த சாய்வான ஈர மண் தரைகள் தாவரங்களை முளைக்கத் தூண்டுகின்றன. இதற்கு மிகப்பெரிய உதாரணம் சதுப்புநிலக் காடுகள்!

விநோதமான முறையில் நீருக்கடியில் வேர் மூழ்கிக் கிடக்கும் மரங்களை உடைய மாங்குரோவ் காடுகளே மிகச் சிறந்த சதுப்பு நிலக்காடுகள். துணைவெப்ப மண்டலங்களில் மட்டுமே இவை உண்டு. அங்கே, கடற்கரை மற்றும் நதி முகத்துவாரங்களில் நல்ல விளைச்சலைத் தரக்கூடிய, வெவ்வேறு வித தாவரங்கள் செழித்து வளர்கின்றன.  உலகத்தின் ஆணிவேர் மாங்குரோவ் காடுகள். மாங்குரோவ் செழிப்பாக இருக்கும்போது ஏராளமான கானுயிர்களும் உயிர்ப்போடு இருக்கும்

Related Stories: