×

கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா?

நாள் பார்ப்பது எப்படி?

வருடா வருடம் நம் இல்லங்களிலோ சுற்றம் நட்பிலோ ஏதோ ஒரு சுபகாரியம் நடந்துக் கொண்டேதான் இருக்கிறது. நல்ல நாள் எதுவென்று குத்துமதிப்பாக காலண்டரை பார்த்துத் தெரிந்துக் கொள்வோம். மேல்நோக்கு, சுபமுகூர்த்தம், அமிர்தயோகம் என்று ஓரளவுக்கு நல்ல நாளை நம்மால் காலண்டர் பார்த்து தெரிந்துக் கொள்ள முடியும். மேலதிகமாக ஒரு ஜோதிடரிடமோ, கோயில் குருக்களிடமோ நாம் குறித்துவைத்த நாள் சரிதானா என்று சரி செய்துக் கொள்கிறோம். இப்படி பொத்தாம் பொதுவாக பார்க்காமல் அவரவர் ராசி, நட்சத்திரம், பிறந்த தேதி, கிழமை இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு துல்லியமாக நாமே நல்ல நாளை பார்க்க முடியும். குறிப்பாக முகூர்த்தத்தேதி குறிப்பிட இதை கற்றுக் கொள்வது அவசியம்.இதோ கார்த்திகை மாதத்தின் இடையில் இருக்கிறோம். அடுத்து மார்கழி. முடிந்ததுமே தை. வரிசையாக கல்யாணத் தேதிகள் வரத் தொடங்கும். கல்யாணத்துக்கு நாள் பார்ப்பது எப்படி?

பஞ்சாங்கம் பார்க்கலாமா?

‘பஞ்சாங்கம் பார்க்காதே மாமா என் மாமா’ என்று சினிமாவில் பாட்டு பாடும் நாயகி கூட அடுத்த வரியே ‘பால் காய்ச்சும் நாள் சொல்லு மாமா’ என்கிறாள். சுவைக்காக மெட்டுக்கு எழுதப்பட்ட பாட்டு. அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. நாள் சொல்லுவதற்கு பஞ்சாங்கம் பார்ப்பதே நம் மரபு.நாள், திதி, நட்சத்திரம், யோகம், கர்ணம் ஆகிய பஞ்ச (ஐந்து) விஷயங்களை பரிசீலிப்பதே பஞ்சாங்கம்.இதில் முதலில் வரும் நாள் என்பது மிக முக்கியமானது. நாம் என்றைக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும் என்பதற்கு கூட நாள்  அதாவது கிழமை - உண்டு. திங்கள், புதன், வியாழன், வெள்ளி, ஞாயிறு ஆகிய ஐந்து நாட்கள் சுபகாரியங்களுக்கு ஏற்றவை. முன்பெல்லாம் ஞாயிற்றுக் கிழமைகளில் முகூர்த்தம் வைப்பதைகூட தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். இப்போது திருமணத்துக்கு அனைவரும் வரும் வகையிலான விடுமுறை நாள் என்பதால், ஞாயிறில் திருமணம் வைப்பது பரவலாகியிருக்கிறது.

நட்சத்திரத்தில் கவனம் செலுத்துங்க!


வானத்தில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் இருக்கலாம். ஆனால், நாம் பிறந்த தேதியின் அடிப்படையில் மனித வாழ்வில் ஆதிக்கம் செலுத்துவது மொத்தம் 27 நட்சத்திரங்கள்தான்.திருவாதிரை, பரணி, கார்த்திகை, ஆயில்யம், பூரம், பூராடம், பூரட்டாதி, கேட்டை, விசாகம், சுவாதி, சித்திரை, மகம் ஆகிய பன்னிரண்டு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் அனைவருமே கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். பண விஷயங்கள், பயணம், உடல் நலம் ஆகியவை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாட்கள் இவை. திருமணம் என்கிற சுபகாரியம் இவை அனைத்துமே சம்பந்தப்பட்டது என்பதால் இந்த நட்சத்திரங்கள் வரும் நாட்களை கொஞ்சம் கவனத்தோட முகூர்த்தத்துக்கு பரிசீலிக்க வேண்டும்.பொதுவாக பலர் அறிந்த யோகங்கள் அமிர்தயோகம், சித்தயோகம், மரணயோகம் ஆகியவைதான். இவை நட்சத்திரங்களின் அடிப்படையிலேயே அமைகின்றன. பரணி, புனர்பூசம், பூரம், சுவாதி, பூராடம், உத்திரட்டாதி எல்லா கிழமைகளிலும் நற்பலன்களை தரும்.ஆனால்-திங்களில் உத்திராடம், புதன் கிழமைகளில் அசுவினி, மூலம்.. வியாழனில் மிருகசீரிஷம், வெள்ளியில் பூசம் மற்றும் திருவோணம்.. சனியில் சித்திரை, ஞாயிறு அன்று அனுஷம் என்று அமைந்தால் அவை தவிர்க்கப்பட வேண்டியவை.

தவிர்க்க வேண்டிய நாட்கள்!

*செவ்வாய், சனி இரண்டை தவிர்க்கலாம். அதற்காக இவை கெட்ட நாட்கள் என்று அர்த்தமல்ல. எல்லா நாளுமே நல்ல நாள்தான். செவ்வாய் அக்னி சம்பந்தப்பட்டது, சனி இயந்திரங்கள் தொடர்புடையது. எனவே, கல்யாணத்துக்கு ஏற்றவை அல்ல.
*பிரதமை, அஷ்டமி, நவமி போன்றவை வரும் கிழமை எந்த கிழமையோ அந்த கிழமை திருமணத்துக்கு ஏற்றதல்ல.

*சில குறிப்பிட்ட கிழமைகளில் வரும் நட்சத்திரங்களை கருத்தில் கொண்டும், அந்நாளில் திருமணத் தேதியை தவிர்க்க வேண்டும்.


திங்கள் : சித்திரை, கார்த்திகை, மகம், விசாகம், அனுஷம், பூரம், பூரட்டாதி
செவ்வாய் : உத்திராடம், திருவாதிரை, கேட்டை, திருவோணம், அவிட்டம், சதயம்
புதன் : அவிட்டம், அசுபதி, பரணி, கார்த்திகை, மூலம், திருவோணம், அவிட்டம்
வியாழன் : கேட்டை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூசம், பூராடம், ரேவதி
வெள்ளி : பூராடம், ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், விசாகம், அஸ்தம், அனுஷம், அவிட்டம்
சனி : ரேவதி, புனர்பூசம், பூசம், உத்திரம், அஸ்தம், ரேவதி
ஞாயிறு : பரணி, கார்த்திகை, மிருகசீரிஷம், மகம், விசாகம், அனுஷம், கேட்டை, பூரட்டாதிஇப்படி நட்சத்திரங்கள் குறிப்பிட்ட கிழமைகளுக்கு அமையும் பட்சத்தில், அந்த நாள் திருமணத்துக்கு ஏற்றதல்ல.

திதி எப்படி பார்க்கணும்?


திங்கள் : சஷ்டி, செவ்வாய் : சப்தமி, புதன் : துவிதியை வியாழன் : அஷ்டமி, வெள்ளி : நவமி, சனி : சப்தமி,

ஞாயிறு : சதுர்த்தசி  இவ்வாறான காம்பினேஷனில் திதி அமைந்தால், சுபகாரியத்துக்கு அந்த நாளை கண்ணை மூடிக்கொண்டு அடித்துவிடலாம். நற்காரியங்கள் செய்ய இந்த கிழமையில், இந்த திதி வந்தால் வேலைக்கு ஆகாது. மீறி செய்தாலும் பலன்கள் இருக்காது.

வளர்பிறையில் அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவற்றுக்கும், தேய்பிறையில் துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி ஆகியவற்றுக்கும் இரு கண்கள் உண்டு. இந்த திதிகளில் சுபகாரியம் மேற்கொள்ளலாம். சில திதிகளுக்கு ஒரு கண் மட்டுமே. முழுமையான பலன் கிடைக்காது. பொதுவாக இரு பிறைகளிலும் அஷ்டமி, நவமி தேதிகளை தவிர்ப்பது நல்லது. அமாவாசை, பவுர்ணமிக்கு முந்தைய நாளாக வரும் சதுர்த்தசியும், அடுத்த நாளாக வரும் பிரதமையும் கூடவே கூடாது.

ராகு கால பேஜார்!

நிழல் கிரகங்கள் என்று ராகு, கேதுவை சொல்கிறார்கள். சர்ப்ப கிரகமான ராகு, ஒவ்வொரு நாளும் ஒன்றரை மணி நேரத்தை முழுங்கிக் கொள்கிறது. ராகு காலத்தில் புதிய முயற்சி எதையுமே துவக்கக்கூடாது என்பது நம் நம்பிக்கை.

திங்கள்     7.30 மணி முதல் 9 மணி வரை.
செவ்வாய்     3 மணி முதல் 4.30 மணி வரை.
புதன்     12 மணி முதல் 1.30 மணி வரை.
வியாழன்     1.30 மணி முதல் 3 மணி வரை.
வெள்ளி     10.30 மணி முதல் 12 மணி வரை.
சனி     9 மணி முதல் 10.30 மணி வரை.
ஞாயிறு     4.30 மணி முதல் 6 மணி வரை.

இந்த நேரங்கள்தான் ராகு விழுங்குபவை.

எமகண்டம் உஷார்!


ராகுகாலத்தை தவிர்ப்பதை போன்றே எமகண்டத்தையும் தவிர்க்க வேண்டும். முந்தையதைவிட இது கொஞ்சம் சீரியஸ். ஏனெனில் இந்த கண்டம், மரணத்துக்கு இணையான விளைவினை ஏற்படுத்தும். ஒவ்வொரு நாளும் இருவேளைகளில் வரும் எமகண்டத்தில் சுபகாரியம் பற்றி பேசுவதைகூட தவிர்ப்பது நல்லது.

திங்கள்     10.30 - 12.00 மற்றும் 3.00-4.30
செவ்வாய்     9.00 - 10.30 மற்றும் 1.30 - 3.00
புதன்     7.30 - 9.00 மற்றும் 12.00 - 1.30
வியாழன்     6.00 - 7.30 மற்றும் 10.30 - 12.00
வெள்ளி      3.00 - 4.30 மற்றும் 9.00-10.30
சனி     1.30 -3.00 மற்றும் 7.30 - 9.00
ஞாயிறு     12.00 - 1.30 மற்றும் 6.00 - 7.30 ஆகிய
நேரங்களில் எமகண்டம் உண்டு.

கரிநாளை கண்டுப்பிடிப்பது எப்படி?

எல்லாம் சரியாக இருந்தாலும் கரிநாளாக இருக்கும் பட்சத்தில், அந்நாளில் சுபகாரியத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஓராண்டுக்கு 34 நாட்கள் கரிநாளாக அமையும். தமிழ் மாத அடிப்படையில் கரிநாள் எவை, எவையென நீங்களே கண்டுப்பிடிக்கலாம்.சித்திரையில் 6 மற்றும் 15, வைகாசியில் 7, 16 மற்றும் 17, ஆனியில் 1 மற்றும் 6, ஆடியில் 2, 10 மற்றும் 20, ஆவணியில் 2, 9 மற்றும் 28, புரட்டாசியில் 16 மற்றும் 29, ஐப்பசியில் 6 மற்றும் 20, கார்த்திகையில் 1, 10 மற்றும் 17, மார்கழியில் 6, 9 மற்றும் 11, தையில் 1, 2, 3, 11 மற்றும் 17, மாசியில் 15, 16 மற்றும் 17, பங்குனியில் 6, 5 மற்றும் 19 ஆகிய தேதிகள் கரிநாட்களாகும்.

வேற என்னவெல்லாம் பார்க்கணும்?

இங்கே சொன்னவற்றையெல்லாம் கணக்கிட்டு ஒரு சுபநாளை குறிக்க முடிந்தால் நீங்களே கிட்டத்தட்ட ஜோதிடராகி விட்டீர்கள் என்று அர்த்தம். சபாஷ், கை கொடுங்கள்.இவை தவிர்த்து, கீழ்க்கண்ட விஷயங்களை திருமண நாளுக்கு பரிசீலிக்க வேண்டும்.

*ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி வரக்கூடிய மாதத்தில் திருமணம் செய்யக்கூடாது.
*சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர்த்து இதர மாதங்களில் திருமணம் செய்வது அவ்வளவு ஏற்றதல்ல.
*புதன், வியாழன், வெள்ளி போன்ற மூன்று கிழமைகளே சுபகாரியங்களுக்கு பிரமாதமானவை.
*ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும்.
*துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது நல்லது.
*திருமண நாளன்று மணமக்கள் இருவரின் ராசிக்குமே சந்திராஷ்டமம் இருக்கக்கூடாது என்பது மிகவும் முக்கியம்.
*மணமக்கள் பிறந்த நட்சத்திர நாளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
*மணமக்களின் பிறந்த தேதியிலோ, கிழமையிலோ நிச்சயமாக திருமணம் நடக்கக்கூடாது.

 யுவகிருஷ்ணா

Tags : Panchangam, Kalyana Tithi
× RELATED அரியானாவில் நடத்தப்பட்ட தடியடி பற்றி...