×

சைபீரியாவில் உறை பனியின் கீழே கண்டறியப்பட்ட விலங்கின் வயது 18,000.! ஆச்சர்யத்தில் விஞ்ஞானிகள்

சைபீரியாவில் கடந்த ஆண்டு உறை பனியின் கீழே கண்டறியப்பட்ட நாய் போன்ற உருவ அமைப்புடைய விலங்கின் வயது ஆயிரம், இரண்டாயிரம் அல்ல சுமார் 18,000 என்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு சைபீரியாவின் யாகுட்ஸ்கின் வடகிழக்கில், இண்டிகிர்கா ஆற்றின் அருகே வேட்டைக்காரர்களால் நிரந்தரமாக மூடப்பட்டிருந்த பனிகட்டிகளுக்கு அடியில் விலங்கின் உடல் ஒன்று கண்டறியப்பட்டது. கண்டறியப்பட்ட விலங்கானது நாய் அல்லது ஓநாய் இனமா என்று குழப்பம் ஏற்பட்டது. கண்டெடுக்கப்பட்ட உடலானது எத்தனை ஆண்டுகளுக்கு முற்பட்டது, அது என்ன இனம் என்பதை கண்டறிய ஆய்வாளர்கள் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தினர். இறுதியில் ரேடியோகார்பன் டேட்டிங் தொழிநுட்பம் மூலம், கண்டறியப்பட்ட விலங்கின் உடலானது 18,000 ஆண்டுகள் பழமையானது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

உறைபனியின் அடியில் இருந்ததால் அதன் உடல் மிக நன்றாக பாதுகாக்கப்பட்டு காணப்படுகிறது. அதன் கண் இமைகள் மற்றும் மீசை கூட நல்ல நிலையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். குறிப்பிட்ட விலங்கானது இறந்த போது 2 மாத வயதுடையதாக இருந்திருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஸ்வீடனில் உள்ள பாலியோஜெனெடிக்ஸ் மையத்தில் நடத்தப்பட்ட மரபணு பகுப்பாய்வு சோதனையில் அந்த விலங்கு ஒரு ஆண் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டது. இதை எல்லாம் கண்டறிந்த விஞ்ஞானிகளால் அந்த விலங்கு நாய் இனமா அல்லது ஓநாய் இனமா என்பதை மிக சரியாக கணித்து சொல்ல இயலவில்லை. இந்த விலங்கு ஒரு ஆரம்பகால நவீன ஓநாயாகவோ அல்லது ஒரு ஆரம்பகால வளர்ப்பு நாயாக கூட இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.


Tags : Scientists ,Siberia ,Siberia Scientists , Siberia, frost ice, animal, age 18,000
× RELATED ஐக்கிய அரபு எமிரேட்ஸை வசீகரமாக்கும் நீள் சிறகு கடற்பறவை!!