×

உலகை வியக்கவைத்த ஆராய்ச்சி!

நன்றி குங்குமம் முத்தாரம்

அமெரிக்காவைச் சேர்ந்த மருத்துவர் டங்கன்மக்டு காலை விநோதமான சிந்தனையொன்று ஆட்டிப்படைத்தது. மனிதனுக்கு ஆன்மா இருக்கிறதா? அப்படி ஆன்மா இருக்கிறது என்றால் அதற்கு ஒரு எடை இருக்க  வேண்டுமே என்று அவரது மூளை சதா இதைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தது. 1901-ம் வருடம் மின்னலைப்போல ஒரு யோசனை அவரது கதவைத் தட்டியது. இறப்பதற்கு சில நிமிடங்கள் இருப்பவர்களிடம் சோதனையைச் செய்தால் ஆன்மாவைக் கண்டுபிடித்துவிடலாம் என்று திட்டம் தீட்டினார். அதாவது இறப்பதற்கு முன்பு ஒருவரின் எடையைக் கணிப்பது, அதே நபர் இறந்த பிறகு எடையைக் கணிப்பது. இரண்டுக்கும் இடையில் ஏதாவது இடைவெளி இருக்கிறதா என்பது அடுத்த சோதனை. இதற்காக ஒரு நர்சிங் ஹோமில் இறக்கும் நிலையில் இருக்கும் ஆறு பேரை தயார் செய்தார். அவர்களில் ஒருவர் சர்க்கரை நோயாளி, இன்னொருவருக்கு காரணம் தெரியவில்லை, மற்றவர்கள் வயதானவர்கள். இறப் பதற்கு முன்பும், பின்பும் அவர்களின் எடையைச் சோதனை செய்தார்.

அந்த ஆறு பேரில் ஒருவரின் எடை 21.3 கிராம் குறைந்திருந்தது. அவருக்கு சந்தோஷம் தாளவில்லை. ஆன்மாவின் எடை 21 கிராம் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஆனால், முட்டாள் தனமான சோதனை என்று அவரைச் சாடினார்கள். மனிதர் எதற்கும் அசரவில்லை. மனிதனுக்கு மட்டுமாஆன்மா இருக்கிறது? விலங்குகளுக்கு இல்லையா? என்று 15 நாய்களைச் சோதனை செய்தார். அவை இறப்பதற்கு முன்பும், பின்பும் ஒரே எடையில் இருக்க, விலங்குகளுக்கு ஆன்மா இல்லை என்று அறிவித்தார். ஆன்மாவின் எடையான 21 கிராம் கலைப் படைப்புகளில் முக்கிய பேசு பொருளாகவே மாறிவிட்டது. ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனர் இனாரிட்டு ‘21 கிராம்ஸ்’ என்று ஒரு படத்தையே எடுத்திருக்கிறார். தவிர, டங்கனைக் கதாபாத்திரமாக்கி புனைவு கதைகள் வெளிவந்தன. டங்கனின் சோதனையை உலகை வியக்க வைத்த ஆராய்ச்சிகளில் ஒன்றாக இப்போது கருதுகின்றனர்.

Tags : World , America, Doctor Duncanmag, soul, research
× RELATED உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில்...