×

தேர்தல் நிதி பத்திரம், ஜேஎன்யு விவகாரம் மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளி: எம்பி.க்கள் மீது வெங்கையா பாய்ச்சல்

புதுடெல்லி: தேர்தல் நிதி பத்திரம், ஜேஎன்யு பல்கலை விவகாரத்தால் மாநிலங்களவையில் நேற்றும் கடும் அமளி ஏற்பட்டது.  தேர்தல் நிதி பத்திரம் மூலம் பாஜ கட்சிக்கு யார் எவ்வளவு நிதி கொடுத்தார்கள் என்ற தகவலை வெளியிட வேண்டுமென காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அமளி செய்து வருகின்றனர். இது தொடர்பாக, நேற்றும் நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர். பாஜவை கண்டித்து பதாகைகள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.பின்னர் மாநிலங்களவை தொடங்கியதும், அவை அலுவல்களை ஒத்திவைத்து விட்டு தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விதி 267ன்கீழ் நோட்டீஸ் கொடுத்திருந்தன. இதற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார்.

‘‘அலுவல்களை ஒத்திவைத்து விட்டு விவாதம் நடத்த வேண்டிய அளவுக்கு முக்கியமானதல்ல,’’ என்றார் வெங்கையா நாயுடு. இதற்கு காங்கிரஸ் மூத்த எம்பி ஆனந்த் சர்மா, ‘‘முக்கியமான ஒரு விவகாரத்தில் தான் விதி 267யை எம்பிக்கள் பயன்படுத்துகிறார்கள்,’’ என்றார். ஆனால், ‘‘ஒருநாளைக்கு நான்கைந்து 267 விதி நோட்டீஸ் வருகின்றன. அவைகளுக்கெல்லாம் அலுவலை ஒத்திவைத்துக் கொண்டிருக்க முடியாது.’’ என்றார் வெங்கையா. இதனால் அதிருப்தி அடைந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் எம்பி ரங்கராஜன், ‘‘தேர்தல் நிதி பத்திரம் மிகப்பெரிய ஊழல்,’’ என்றார்.

அமளிக்கு இடையே பூஜ்ய நேரத்தில் கேள்வி எழுப்ப நோட்டீஸ் கொடுத்திருந்த காங்கிரஸ் எம்பி திக்விஜய் சிங் பேச வெங்கையா நாயுடு அனுமதி அளித்தார். ஆனாலும் அவரும் தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக பேச உடனடியாக அவரை இடைமறித்து, ‘‘இது தொடர்பாக விவாதம் நடக்கும்போது பேசுங்கள்,’’ என்று கூறி அமருமாறு கூறினார். இதனால், ஆத்திரமடைந்த திக்விஜய் சிங், ‘‘இது நியாயமே இல்லை,’’ என்றார். பதிலுக்கு வெங்கையா நாயுடு, ‘‘இப்படியெல்லாம் அவைத் தலைவரை மிரட்டக் கூடாது. உங்கள் ஒட்டுமொத்த அனுபவத்தில் நீங்கள் செய்தது எல்லாமே நியாயம் இல்லாதவைகள் தான்,’’ என்றார். இதனால் கடும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதே போல, டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை (ஜேஎன்யு) மாணவர்கள் விடுதி கட்டணம் உயர்த்தப்பட்ட விவகாரத்திலும் கடும் அமளி ஏற்பட்டது. பூஜ்யநேரத்தில் இவ்விவகாரத்தை எழுப்பிய மார்க்சிஸ்ட் உறுப்பினர் ராகேஷ், ‘‘விடுதி கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி உள்ளனர். இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தவேண்டும்’’ என்றார். அப்போது பாஜ உறுப்பினர் பிரபாத் ஜா குறுக்கிட்டு, இந்தியாவுக்கு எதிராக மாணவர்கள் முழக்கமிடுவதாக குற்றம்சாட்டினார். இதற்கு இடதுசாரி கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து பேச முயன்ற ராகேஷின் மைக்கை ஆப் செய்த அவைத்தலைவர் வெங்கையா நாயுடு வாக்குவாதம் திசைமாறி செல்வதாக குற்றம்சாட்டினார்.

அமளியில் ஈடுபடும் எம்பி.க்களுக்கு செக்
மாநிலங்களவையில் நேற்று தொடர் அமளி காரணமாக, அவைத்தலைவர் வெங்கையா நாயுடு உறுப்பினர்களை பலமுறை எச்சரித்தார். அவர் கூறுகையில், ‘‘இனி அமளி காரணமாக, பூஜ்ய நேரத்தில் அவை ஒத்திவைக்கப்பட்டால், எம்பிக்கள் கேள்வி எழுப்புவதற்காக கொடுத்த நோட்டீஸ்கள் அன்றைய தினமே காலாவதியாகி விடும். யாரும் அவையில் பதாகை, துண்டு பத்திரிகைகள், முககவசம் போன்றவற்றை காட்டக் கூடாது,’’ என கட்டுப்பாடுகளை விதித்தார்.

பொதுவாக, பூஜ்ய நேரத்தில் முக்கிய பிரச்னைகள் தொடர்பாக பேச எம்பிக்கள் நோட்டீஸ் தருவது வழக்கம். ஒருவேளை அவை ஒத்திவைக்கப்பட்டதால், அடுத்த நாள் அந்த நோட்டீஸ்கள் எடுத்துக் கொள்ளப்படும். இதனால் தான் பல எம்பிக்கள் தொடர்ந்து அமளி செய்வதை வாடிக்கையாக வைத்திருப்பதாகவும், இனி இந்த நடைமுறை தொடரக் கூடாது என வெங்கையா நாயுடு செக் வைத்துள்ளார்.

‘நீங்கள் என்ன அமைச்சரா?’
டெல்லி காற்று மாசு விவாதத்திலும் எதிர்க்கட்சி எம்பி.க்கள் பேசுவதற்கு வெங்கையா நாயுடு அனுமதிக்கவில்லை. இதுதொடர்பான விவாதத்தின் போது, டெல்லியில் காற்று மாசால் குடிநீரின் தரம் மோசமடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் விஜய் கோயல் கூறினார்.  இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ‘‘சமீபத்தில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் தலைமையிலான குழு டெல்லியில் குடிநீர் மாதிரிகளை ஆய்வு செய்து, மற்ற மாநிலங்களைக் காட்டிலும் டெல்லியில் குடிநீர் தரம் நன்றாக இருப்பதாக கூறியதே,’’ என கேள்வி எழுப்பினார்.

அமைச்சரின் பேச்சுக்கு தொடர்ந்து பதிலடி தந்த சஞ்சய் சிங்கையும் அவைத்தலைவர் பேச அனுமதிக்கவில்லை. ஒரு கட்டத்தில், ‘‘அமைச்சர் தரும் பதிலை கேளுங்கள். அதில், திருத்தம் செய்வதற்கு நீங்கள் என்ன அமைச்சரா?’’ என்று வெங்கையா கேட்டார்.

தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை
மக்களவையில் கேள்வி நேரத்தின் போது, பால் கலப்படம் குறித்து திமுக எம்பி டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு நேற்று பதிலளித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே, ‘‘தமிழகம், கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாலில் அப்லாடாக்சின் எம்.1 (Aflatoxin M1) என்ற நச்சு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருக்கிறது. பாலில் நச்சுத்தன்மை அதிகம் உள்ள மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. இதற்கு, அடுத்த இடங்களில் டெல்லி, கேரளா மாநிலங்கள் உள்ளன.  உணவு கட்டுப்பாடு மற்றும் தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில் 551 பால் மாதிரிகளில் 88 பால் மாதிரிகளில் நச்சுத்தன்மை அதிகம் இருப்பது தெரிய வந்தது,’’ என்றார்.

மக்களவையில் வெளிநடப்பு
மக்களவையில், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக கேள்வி நேரத்தில் காங்கிரஸ் அவைத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது அவர், ‘‘அரசுக்கு சலுகை காட்டும் சில தனியார் முதலாளிகளுக்காக பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படுகின்றன. லாபம் தரும் சொத்துக்களை அரசு விற்கிறது. அதுவும், நாடாளுமன்றத்தில் எந்த ஒரு ஆய்வும் நடத்தாமலே தன்னிச்சையாக முடிவெடுக்கிறது’’ என்றார். உடனே, சபாநாயகர் ஓம் பிர்லா, ‘‘உங்களுக்கு தரப்பட்ட நேரம் முடிந்து விட்டது’’ என அமரச் சொன்னார். இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்பிக்கள் சிறிது நேரம் வெளிநடப்பு செய்தனர்.

தினமும் 25,000 டன் பிளாஸ்டிக் கழிவு
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் அளித்த பதிலில், ‘இந்தியாவில் தினமும் 25 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. மீதம் 40 சதவீத அளவுக்கு பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கப்படாமல் சிதறிக் கிடக்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளதை தொடர்ந்து, பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை நமக்கு சவாலான பிரச்னையாக  உருவெடுத்துள்ளது,’ என்கு கூறியுள்ளார்.

Tags : Rajya Sabha ,affair ,JNU , Electoral Fund, JNU Affairs, Rajya Sabha
× RELATED கரூர் தீயணைப்பு நிலையத்தில்...