×

மாரடைப்பு சம்பவங்கள் அதிகரிப்பு சபரிமலையில் 3 பேர் பலி: 15 இடங்களில் சிகிச்சை மையம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் நடை திறந்த 5 நாளில் 15 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 3 பேர் இறந்துள்ளனர். சிரமம் உள்ள பக்தர்கள் உரிய சிகிச்சை பெற வேண்டும் என கேரள சுகாதார அமைச்சர் சைலஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலகால பூஜை கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதற்காக கடந்த 16ம் தேதி நடை திறக்கப்பட்டது. மண்டல கால பூஜையையொட்டி ஐயப்பனை தரிசனம் செய்ய தமிழகம், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். கடந்த 5 நாளில் மட்டும் தரிசனம் செய்த பக்தர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தையும் தாண்டி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க சபரிமலையில் தரிசனத்துக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த தொழிலாளி உள்பட 3 பேர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு பலியாகி உள்ளனர். இது தொடர்பாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா கூறியதாவது: பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் பாதை மிகவும் செங்குத்தான பாதையாகும். இந்த இடத்தை கடப்பதற்கு பலவீனமானவர்களுக்கு சிரமம் ஏற்படும். எனவே இதய நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்காக பம்பை முதல் சன்னிதானம் வரை 15க்கும் மேற்பட்ட இடங்களில் இதய சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மலையேறும் போது யாருக்காவது ஏதாவது சிரமம் ஏற்பட்டால் உடனடியாக அவர்கள் அங்குள்ள சிகிச்சை மையங்களில் உடல் பரிசோதனை செய்ய வேண்டும்.
கடந்த 5 நாட்களில் மட்டும் 15 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 12 பேருக்கு உரிய சிகிச்ைச அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டு உள்ளனர். 3 பேர் மரணமடைந்துள்ளனர். 20 முதல் 76 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Sabarimala , Heart attack, sabarimalai, 3 killed
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு