ராதாபுரம் தொகுதி தேர்தல் வழக்கில் இறுதி விசாரணை எப்போது? 29ல் உச்ச நீதிமன்றம் முடிவு: இடைக்கால தடை நீட்டிப்பு

புதுடெல்லி: ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடுவது தொடர்பான வழக்கில் இறுதி விசாரணையை எப்போது நடத்துவது என்பதை வரும் 29ம் தேதி கூறுவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் எம்.அப்பாவுவும், அ.தி.மு.க சார்பில் ஐ.எஸ். இன்பதுரையும் போட்டியிட்டனர். இதில், இன்பதுரை 49 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த வெற்றியை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பாவு வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளையும் மறுஎண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. அதன்படி, மறுவாக்கு எண்ணிக்கையும் நடத்தப்பட்டது.

இந்நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை விதிக்கக் கோரியும், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்பதுரை வழக்கு தொடர்ந்தார். இதை கடந்த 3ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மறுவாக்கு எண்ணிக்கையை ரத்து செய்ய முடியாது. இந்த வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது,’ என அறிவித்தது. மேலும், வழக்கை நவம்பர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  இருதரப்பு வாதங்களையும் கேட்டு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த வழக்கு நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.

அன்றைய தினம், இந்த வழக்கில் இறுதி விசாரணை எப்போது நடத்தப்படும் என்பது முடிவு செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், வழக்கு தொடர்பாக அனைத்து ஆவனங்களையும் இரு தரப்பும்  தாக்கல் செய்ய வேண்டும்,’’ என தெரிவித்தனர். இதனால், இந்த வழக்கில் தற்போதுள்ள நிலையே 29ம் தேதி வரை தொடரும்.

Related Stories: