புழல் சிறை மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சை அளிப்பதில் சிக்கல்: கைதிகள் பரிதவிப்பு

புழல்: சென்னை புழல் (தண்டனை, விசாரணை, மகளிர்) சிறையில் 200க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் உள்ளிட்ட 2500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு பல்வேறு வழக்குகளில் இருந்து சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் கைது செய்யப்பட்ட கைதிகளில் பலர் படுகாயம் அடைந்து கை, கால்கள் உடைந்த நிலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு படுகாயம் அடைந்த கைதிகளுக்கு சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. மேலும் மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்கு இவர்களுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கும் வகையில் போலீசாரும் இல்லாததால் கை, கால்கள் உடைந்த 20க்கும் மேற்பட்ட கைதிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, காயத்துடன் அவதிப்பட்டு வரும் கைதிகளுக்கு போதிய சிகிச்சை அளிக்கும் வகையில் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யவும், மேல் சிகிச்சைக்காக செல்லும் கைதிகளுக்கு பாதுகாப்புக்காக கூடுதல் போலீசாரை நியமனம் செய்யவும் வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘புழல் சிறைக்கு நாள்தோறும் ஒரு கைதியாவது கை, கால்கள் உடைந்த நிலையில் வருகின்றனர். இவ்வாறு காயத்துடன் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சிறையில் இருக்கும் மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை. இதனால் பெரும்பாலான கைதிகள் காயங்களுக்கு சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சிறைத்துறையின் உயர் அதிகாரிகள் உடனடியாக புழல் சிறையில் ஆய்வு மேற்கொண்டு கை, கால்கள் உடைந்த நிலையில் வாடும் கைதிகளுக்கு உரிய சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் புழல் சிறையில் உள்ள மருத்துவமனைக்கு போதிய மருத்துவர்களை நியமிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: