மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு ஊழியர் மர்மச்சாவு: உறவினர்கள் பரபரப்பு புகார்

பெரம்பூர்: சென்னை மாநகராட்சி 8வது மண்டலம், 96வது வார்டில் துப்புரவு ஆய்வாளர் மற்றும் சுகாதாரத் துறை ஆய்வாளர் அலுவலகம் உள்ளது.  இங்கு, ஓட்டேரி எஸ்எஸ்.புரம் 11வது தெருவைச் சேர்ந்த முன்னா (26) என்பவர், ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக வேலை செய்து வந்தார்.  நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்ற இவர், காலை வரை வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த முன்னாவின் தாய், சக பணியாளர்களுக்கு போன் செய்து விசாரித்தார். உடனே சக பணியாளர்கள்  நேற்று  காலை அயனாவரம் 96வது வார்டில் உள்ள துப்புரவு ஆய்வாளர் அலுவலகத்திற்கு  சென்று பார்த்தபோது,  முன்னா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

தகவலறிந்து வந்த அயனாவரம் போலீசார், முன்னா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து முன்னாவின் உறவினர்கள் கூறுகையில், ‘‘முன்னாவுடன் வேலை செய்தவர்கள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் புரசைவாக்கம் பகுதியில் லாரியில் இருந்து இறங்கி தங்களது வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் முன்னா  எப்படி மீண்டும் அயனாவரம் மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றார் என தெரியவில்லை.

மேலும், அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட இடம் மிகவும் உயரம் குறைவாக உள்ளது. எனவே அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்று தெரிவித்தனர். இதுகுறித்து அயனாவரம் போலீசார்  விசாரித்து வருகின்றனர்.

Related Stories: