கேரளா, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.12 கோடி தங்க கட்டிகள் பறிமுதல்: 5 பயணிகள் பிடிபட்டனர்

மீனம்பாக்கம்:  கேரள மாநிலம் கொச்சியில் இருந்து ஒரு பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மதியம் 12.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, கேரளாவை சேர்ந்த முகமது (29), யூசுப் (26) ஆகிய 2 பயணிகள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால், அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். அதில், கறுப்பு நிற காகிதத்தில் சுற்றப்பட்ட எலக்ட்ரானிக் எடை மெஷின் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது, மெஷினுக்குள் 21 தங்கக் கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் எடை 2.5 கிலோ. இதையடுத்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, துபாயில் இருந்து ஒரு தனியார் விமானம் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் சென்னை விமான நிலையம் வந்தது.

 அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, ராமநாதபுரத்தை சேர்ந்த இஸ்மாயில் (32) என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.  இதனால், அவரது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. அவரை ஸ்கேன் செய்து பார்த்ததில், அவரது உள்ளாடைக்குள் 300 கிராம் தங்க கட்டிகளை மறைத்து, கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து, தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.

அதை தொடர்ந்து, துபாயில் இருந்து ஏர் இந்தியா விமானம் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு சென்னை  விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது, சென்னையை சேர்ந்த இம்ரான் (30), கான் (30) ஆகிய இருவரின் சூட்கேஸ்களில் 14 லேப்டாப்கள், 40 வெளிநாட்டு சிகரெட் பண்டல்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்தனர். இருவரின் உடலை ஸ்கேன் செய்து பார்த்ததில், அவர்களின் உள்ளாடைக்குள் தலா 200 கிராம் தங்க கட்டியை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அதிகாரிகள் அவர்கள் இருவரையும் கைது செய்து, தங்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர். விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மதியம் முதல்  நேற்று காலை வரை நடைபெற்ற சோதனையில், 5 பயணிகள் கடத்தி வந்த 3.2 கிலோ தங்கம், 14 லேப்டாப், 40 சிகரெட் பண்டல்கள் என ₹1.12 கோடி மதிப்பிலான பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Related Stories: