50 லட்சம் குட்கா, வேன், கார் பறிமுதல்: 3 பேர் கைது

அண்ணாநகர்: விருகம்பாக்கம் போலீசார் நேற்று காலை சாலிகிராமம், ஏ.வி.எம். தெரு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியே வந்த லோடு வேன் மற்றும் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அவற்றில், தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் 290 கிலோ இருப்பது தெரிந்தது. இதையடுத்து வேன் மற்றும் காரை ஓட்டி வந்த மதுரவாயல் ரங்கா நகரை சேர்ந்த ராமமூர்த்தி (33), வடபழனி அழகிரி நகரை சேர்ந்த செல்வம் (26) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அதில், நெற்குன்றம் பல்லவன் நகர் ஸ்கூல் தெருவில் மகேஷ் (36) என்பவருக்கு சொந்தமான குடோனில் இருந்து குட்காவை வாங்கி வந்ததாக தெரிவித்தனர். போலீசார், அந்த குடோனில் சோதனை செய்தபோது 1685 கிலோ குட்கா பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து மகேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 50 லட்சம் மதிப்புள்ள 1975 கிலோ குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார், வேன், ₹3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். 3 கஞ்சா வியாபாரிகள் கைது: சேத்துப்பட்டு  மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர்  தங்கய்யா, பிரபல கஞ்சா வியாபாரி. இவர் மீது 3 கொலை மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதுவரை 10க்கும் மேற்பட்ட முறை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர். இவர், வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள சரிதா (34) என்பவரது வீட்டில் கஞ்சா பதுக்கி, வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதாக எம்கேபி நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.

அதன்பேரில், போலீசார் நேற்று அந்த வீட்டில் சோதனை செய்தபோது, தங்கையா மற்றும் சத்யா நகரை சேர்ந்த வாசு (64) மற்றும் சரிதா ஆகியோர், கஞ்சாவை சிறு சிறு பொட்டலங்களாக தயார் செய்வது தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். „ விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று சென்னை சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வந்த தேனி மாவட்டம், உசிலம்பட்டி பகுதியை சேர்ந்த நாத் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 14 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Related Stories: