அரும்பாக்கம் பகுதியில் மாட்டு தொழுவமாக மாறிய சாலை: பொதுமக்கள் அவதி

அண்ணாநகர்: சென்னை அரும்பாக்கம் பாஞ்சாலி அம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ள சிலர் 50க்கும் மேற்பட்ட மாடுகளை வளர்க்கின்றனர். ஆனால், முறையாக கொட்டகை அமைத்து மாடுகளை வளர்க்காமல், அவற்றை சாலையிலேயே கட்டி வைத்து வளர்க்கின்றனர்.   மாடுகளின் கழிவுகள் தெருவிலேயே தேங்கி சகதியாக மாறியுள்ளதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்  சிரமத்துடன் செல்கின்றனர். குறிப்பாக, இவ்வழியாக செல்லும் மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி வழுக்கி வியும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து வருகிறது.

மாடுகளின் கழிவுகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் மூக்கை பிடித்தபடி செல்கின்றனர். மாதக்கணக்கில் தேங்கும் கழிவுகளால் அப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை ஆய்வாளரிடம் இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சாலையில் மாடுகளை கட்டுவதால் மாட்டுத் தொழுவம் போல் காட்சியளிக்கிறது. இதனால், அவதிப்பட்டு வருகிறோம். சுகாதாரத்துறை ஆய்வாளரிடம் பலமுறை இதுபற்றி முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சாலையில் மாடுகளை கட்டி வளர்ப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: