ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அறநிலையத்துறை அதிகாரியை பொதுமக்கள் திடீர் முற்றுகை

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் 108 வைன தலங்களில் ஒன்று. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு சொந்தமாக அப்பகுதியை சுற்றி ஏராளமான வீடு, கடைகள் மற்றும் நிலங்கள் உள்ளன. இதன்மூலம் வாடகை வசூலிக்கப்பட்டு கோயிலின் வளர்ச்சி பணிகளுக்கு செலவிடப்படுகிறது.

இந்த கோயிலுக்கு சொந்தமான கட்டிடங்களில் குடியிருக்கும் சிலர் பல ஆண்டுகளாக வாடகை பாக்கி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக ரூ.20 கோடி வரை வாடகை பாக்கி இருப்பதாக தெரிகிறது. இந்த வாடகை பாக்கி வைத்திருப்பவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக கருதி வெளியேற்ற அறநிலையத்துறை ஆணையர் பணீந்தர ரெட்டி உத்தரவிட்டார்.

அதன்பேரில், நேற்று திருவல்லிக்கேணி வி.ஆர்.பிள்ளை தெருவில் உள்ள கோயிலுக்கு சொந்தமான அடிமனையில் உள்ள கட்டிடத்தை சீல் வைக்க சென்னை மாவட்ட உதவி ஆணையர் கவனிதா, கோயில் நிர்வாக அலுவலர் ஜோதிலட்சுமி தலைமையிலான குழு சென்றது.  அங்கு, சீல் வைக்க வந்த உதவி ஆணையர் மற்றும் கோயில் ஊழியர்களை அப்பகுதி மக்கள் சிறைபிடித்தனர். தகவலறிந்து அங்கு வந்த காவல்துறை உதவி ஆணையர் சரவணன் மற்றும் திருவல்லிக்கேணி போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அறநிலையத்துறை அதிகாரிகளை மீட்டனர். தொடர்ந்து காவல்துறை உதவி ஆணையர் சரவணன், ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து எங்களிடம் ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று அறநிலையத்துறை உதவி ஆணையர் கவனிதாவிடம் விளக்கம் கேட்டார். இதற்கு உதவி ஆணையர் கவனிதா முறையாக பதில் அளிக்கவில்லை, என்று கூறப்படுகிறது.

இதனால் சரவணனுக்கும், கவனிதாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் உதவி ஆணையர் சரவணனிடம், எங்களுக்கு நோட்டீஸ் ஏதும் அளிக்காமல் திடீரென சீல் வைப்பதற்காக வந்தனர். அதனாலேயே நாங்கள் அவர்களை முற்றுகையிட்டோம் என்றனர். அப்போது, உதவி ஆணையர் சரவணன், கவனிதாவிடம் இதுபோன்று முறையான அனுமதி இல்லாமலும், உரிய அறிவிப்பு கொடுக்காமல் வந்தால் எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது என்று கூறினார்.  அப்போது, மறுபடியும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதையடுத்து, கவனிதா தன்னுடைய காரில் அங்கிருந்து கோபமாக புறப்பட்டு சென்றார். தொடர்ந்து ஊழியர்களும் சீல் வைக்காமல் திரும்பி சென்றனர். இச்சம்பவம் திருவல்லிக்கேணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: