×

5 கோடி சொத்துக்காக குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற பெண் கள்ளக்காதலனை பிடிக்க தனிப்படை

சென்னை: 5 கோடி சொத்துக்காக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மாமனார், மைத்துனரை கொன்றது குறித்து இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான கள்ளக்காதலன் தலைமறைவாகி உள்ளார். அவரை தனிப்படை தேடி வருகிறது.  சென்னை தாம்பரம் அடுத்த படப்பையை சேர்ந்தவர் சுப்புராயன். இவரது மனைவி பத்மினி (65). இவர்களது மகன்கள் செந்தில்குமார், ராஜ்குமார். கான்ட்ராக்டரான சுப்புராயன், படப்பையில் வீடுகள் மற்றும் இடங்கள் வாங்கி வசதியாக தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். அதிமுக பிரமுகரான செந்தில்குமாருக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மேனகா (29) என்பவரையும், ராஜ்குமாருக்கு பெரும்புதூரை சேர்ந்த ஆனந்தி என்பவரையும் திருமணம் செய்து வைத்தனர்.

செந்தில்குமார், தனது குடும்பத்தினருடன் படப்பை அடுத்த ஆனந்தஞ்சேரியில் வசித்து வருகிறார். அதே பகுதியில் ராஜ்குமாரும் வசித்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு செந்தில்குமாருக்கும், ராஜ்குமாருக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது. இதில் தம்பி ராஜ்குமார் குத்திக் கொல்லப்பட்டார். செந்தில்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில் செந்தில்குமாரின் கார் டிரைவரான ராஜேஷ்கண்ணாவுக்கும் மேனகாவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.  இந்நிலையில், ஜாமீனில் வெளியே வந்த செந்தில்குமார், மீண்டும் தந்தையிடம் சொத்து கேட்டு தகராறு செய்துள்ளார். சில நாட்களில், கள்ளத்தொடர்பு விவகாரம் செந்தில்குமாருக்கு தெரிந்தது. சில நாட்களில் அவரும் மாயமானார்.

இந்நிலையில், தனது கணவருக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து கொடுக்கும்படி சுப்புராயனிடம் மேனகா கேட்டதோடு, அடிக்கடி மிரட்டியும் வந்துள்ளார். திடீரென ஒரு நாள் சுப்புராயனை ஒரு கும்பல் வெட்டிக் கொன்றது. இது தொடர்பாக ராஜேஷ்கண்ணாவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதையடுத்து, சுப்புராயனின் மனைவி பத்மினி, பெரும்புதூரில் வசித்து வந்து வந்த 2வது மருமகள் ஆனந்தி வீட்டில் தங்கினார். சுப்புராயன் இறந்ததால் அனைத்து சொத்துக்களும் பத்மினி வசம் இருந்தது. இதனால் அடிக்கடி பெரும்புதூருக்கு சென்று சொத்து கேட்டு அவரிடம் தகராறு செய்தார் மேனகா. ஒரு கட்டத்தில் அவரை கடத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்க மிரட்டினார். இதற்கிடையில் இத் தகவல் போலீசாருக்கு தெரிந்து மேனகாவை பிடித்து விசாரித்தனர்.

அப்போது  சொத்துக்காக குடும்பத்தினரை மேனகா தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. கணவன் மாயமாகி விட்டார் என்று கூறினாலும் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மேனகா மீது ஆள் கடத்தல், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்தனர். விசாரணையில் தொடர் கொலைகள் பற்றி அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.   இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ராஜேஷ் கண்ணா தலைமறைவாக உள்ளார். அவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

 அவரை பிடித்தால், மேனகா குறித்து அனைத்து உண்மைகளும் வெளிவரும். இருவரும் சேர்ந்து சொத்துக்காக இதுவரை எத்தனை பேரை கொலை செய்துள்ளனர் என்று தெரியவரும்.  மேலும், செந்தில்குமார் மாயமானாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து முழு விபரங்களும் வெளியே வரும் என்று செந்தில்குமாரின் உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் கண்ணாவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : Property., Woman, Counterfeit, Private
× RELATED தோகாவில் இருந்து சென்னைக்கு...