தாலிக்கட்டிய சில மணிநேரத்தில் முதல் காதலிக்கு கணவனை விட்டுக்கொடுத்த கல்லூரி மாணவி

ஒரத்தநாடு: ஒரத்தநாடு அருகே தாலிக்கட்டிய சில மணிநேரத்தில் முதலில் காதலித்த பெண்ணுக்கு தனது கணவரை கல்லூரி மாணவி விட்டுக்கொடுத்தார். அவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை கம்பி எண்ணுகிறார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஒக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார். அப்போது தனியார் கல்லூரியில் படித்து வந்த திருப்பூரை சேர்ந்த சத்யப்பிரியாவை காதலித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன் கீழையூருக்கு சந்தோஷ், சத்யப்பிரியா ஆகியோர் வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தஞ்சை அருகே உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையில் திருப்பூர் டவுன் போலீசில் தனது மகளை காணவில்லையென சத்யப்பிரியாவின் தந்தை பிரபாகரன் புகார் செய்திருந்தார். இதையடுத்து சந்தோசுடன் சத்யப்பிரியா சென்ற தகவல் கிடைத்ததும் திருப்பூர் போலீசாரும், பெண்ணின் பெற்றோரும் ஒரத்தநாடு போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலை வந்தனர்.

தகவலறிந்த சந்தோஷ், சத்யப்பிரியா ஆகியோர் காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்தனர். அப்போது திடீரென காவல் நிலையத்துக்குள் ஒக்கநாட்டைச் சேர்ந்த ரவி, மல்லிகா தம்பதியின் மகள் சரண்யா புகார் மனுவுடன் வந்தார். கல்லூரி மாணவியான அவர் அளித்த புகார் மனுவில், சந்தோஷ் தன்னை காதலித்ததாகவும், அவரோடு வேளாங்கண்ணி மற்றும் பல்வேறு கடற்கரை பகுதிகளுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாகவும். திருப்பூரில் இரண்டு பேரும் குடும்பம் நடத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது. மேலும் நம்பிக்கை துரோகம் செய்யும் சந்தோஷை எனக்கு மீட்டு தருமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. சந்தோஷ், சரண்யா ஆகியோர் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை போலீசாரிடம் காண்பித்தார். இதனால் ஒரத்தநாடு, திருப்பூர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை நடத்த பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு ஒரத்தநாடு போலீசார் பரிந்துரை செய்தனர். இதைதொடர்ந்து சந்தோஷ், சத்யப்பிரியாவிடம் சப்இன்ஸ்பெக்டர் லதா விசாரணை நடத்தினார். அதில் சரண்யாவுக்கு சந்தோஷை விட்டு கொடுத்து விட்டு தனது பெற்றோருடன் செல்வதாக சத்யப்பிரியா தெரிவித்தார். பின்னர் சரண்யா கொடுத்த புகாரின்பேரில் சந்தோஷை கைது செய்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: