மாணவர்களின் முடி அலங்காரம் ஒழுங்குபடுத்த சலூன்களுக்கு நோட்டீஸ் விநியோகம் பள்ளி ஆசிரியர்கள் நூதன பிரசாரம்

பென்னாகரம்: பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரத்தை முறைப்படுத்தகோரி, பென்னாகரம் பகுதியில் சலூன் கடைக்காரர்களுக்கு துண்டு பிரசுரங்களை விநியோகித்து ஆசிரியர்கள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர். பள்ளி மாணவர்களின் சிகை அலங்காரம், நாளுக்குநாள் அலங்கோலமாகி வருவதாக புகார் எழுந்துள்ளது. பெற்றோர் பேச்சை பொருட்படுத்தாமல் மனம்போன போக்கில் முடி திருத்திக்கொண்டு பள்ளிக்கு செல்வதில் ஒரு வகை மாணவர்களும், பெற்றோர் சம்மத்துடன் ஸ்டைல் என்ற பெயரில் வி.கட், ஷேப் கேட் என்று முடி வெட்டிக்கொண்டு பள்ளிக்கு செல்லும் மற்றொரு வகை மாணவர்களும் உண்டு. இவ்வாறு திரியும் மாணவர்களால், பள்ளிகளுக்கான விதிமுறைகள் காற்றில் பறப்பதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் பெரும்பாலான பள்ளிகளில், மாணவர்கள் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் பள்ளிக்கு வருவதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, மாணவர்களின் சிகை அலங்காரத்தை முறைப்படுத்தும் நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் முனியப்பன் தலைமையில், பென்னாகரத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளுக்கும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

அப்போது, அரசு அறிவித்தவாறு மாணவர்களுக்கு முடிவெட்ட வேண்டுமென அறிவுறுத்தினர். இந்த பிரசாரத்தில் பென்னாகரம் போலீஸ் எஸ்ஐ மாரியும் கலந்து கொண்டு, சலூன் கடைக்காரர்களுக்கு அறிவுரை கூறினார். மேலும், முடி திருத்துவோர் சங்கத்திடம் பள்ளி மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள விதிப்படிதான் முடி வெட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த பிரசாரத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டு கடை கடையாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஆசிரியர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த நூதன பிரசாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: