மாவோயிஸ்ட் தீபக் தே.பா. சட்டத்தில் கைது: சட்டீஸ்கர் போலீசிடம் ஒப்படைப்பு

கோவை: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மஞ்சகண்டி வனப்பகுதியில் கடந்த மாதம் 28-ந் தேதி கேரள தண்டர்போல்ட் போலீசாருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழகத்தை சேர்ந்த மணிவாசகம், கார்த்திக், சுரேஷ், அஜிதா ஆகிய 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 3 பேர் காயத்துடன் தப்பி ஓடினர். இந்த 3 பேரில் ஒருவரான சட்டீஸ்கரை சேர்ந்த மாவோயிஸ்ட் தீபக்கை கோவை ஆனைகட்டி வனப்பகுதியில் கடந்த 9ம் தேதி தமிழக அதிரடிப்படை போலீசார் பிடித்தனர். அவர் மீது உபா சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்தநிலையில், மாவோயிஸ்ட் தீபக்கை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட எஸ்பி. சுஜித்குமார் கலெக்டர் ராசாமணிக்கு பரிந்துரை அனுப்பினார். இதனை கலெக்டர் ராசாமணி ஏற்றுக்கொண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவு பிறப்பித்தார். இதற்கான உத்தரவு நகலை சிறைத்துறை அதிகாரிகளிடம் போலீசார் அளித்தனர்.

சட்டீஸ்கர் போலீசாரிடம் ஒப்படைப்பு: பின்னர், இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார். அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். அதன்பின், போலீஸ் ஆம்புலன்ஸ் மூலம் கோவை விமான நிலையம் கொண்டு சென்றனர். அங்கு, தமிழக போலீசார், சட்டீஸ்கர் மாநில போலீசரிடம் தீபக்கை ஒப்படைத்தனர். அங்கிருந்து விமானம் மூலம் தீபக்கை விசாரணைக்காக சட்டீஸ்கர் மாநிலத்திற்கு அழைத்து சென்றனர்.

Related Stories: