×

கூட்டுறவு சங்கங்களின் காலி பணியிடத்தை நிரப்ப 7 மாவட்டங்களில் இன்று நடக்க இருந்த தேர்வு ரத்து: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களில் உதவி செயலாளர், மேலாளர் உள்ளிட்ட பல பதவிகள் காலியாக உள்ளன. இந்த பதவிகளை நிரப்ப அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க நிர்வாகம் அறிவிப்புகளை வெளியிட்டது. அதில், பல்கலை மானியக்குழு அங்கீகரித்துள்ள பல்கலைக்கழகத்தில் இருந்து இளங்கலை பட்டப்படிப்பு, கூட்டுறவுத்துறை நடத்தும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சியில் தேர்ச்சிப் பெற்று இருக்கவேண்டும். கம்ப்யூட்டர் அறிவு, கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி முன்அனுபவம் இருக்க வேண்டும் உள்ளிட்ட தகுதிகளை கேட்டிருந்தனர். சில மாவட்டங்களில், தொலைதூர கல்வி மூலம், முதுகலை டிப்ளமோ கூட்டுறவு மேலாண்மை படிப்பு பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும்அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு சேலம், கிருஷ்ணகிரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருந்தது.

இந்நிலையில், விண்ணப்பம் செய்தவர்களில், தொலை தூர கல்வி மூலம் கூட்டுறவு படிப்பை முடித்தவர்களது விண்ணப்பம் சில மாவட்டங்களில் நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.என்.டெனின் ஷீபோக் என்பவர் மனுதாக்கல் செய்தார். அதில், ‘இன்ஜினியரிங் படிப்பை முடித்து விட்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலை தூர கல்வி மூலம் கூட்டுறவு படிப்பை முடித்தேன். ஆனால், கூட்டுறவுத்துறை நடத்தும் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்பயிற்சி பெற்றவர்களின் விண்ணப்பத்தை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளனர். எனவே என் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள சேலம் மாவட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார். இதேபோல நீலகிரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை எதிர்த்து பலர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், சிறப்பு அரசு பிளீடர் பால ரமேஷ், மனுதாரர்கள் சார்பில் வக்கீல் கிங்ஸ்டன் ஜெரால்டு, சிவகுமார் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது, ஒவ்வொரு மாவட்டங்களிலும் வெளியிடப்பட்ட காலிப்பணியிடத்துக்கான அறிவிப்பில் குறைபாடு உள்ளதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். இதையடுத்து கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், நீதிமன்ற அறையில் இருந்து வெளியில் சென்று, கூட்டுறவுத்துறை உயர் அதிகாரிகளுடன் தொலைபேசியில் பேசினார். அறிவிப்புகளில் உள்ள குறைபாடுகளை எடுத்துரைத்தார். பின்னர் நீதிபதி முன்பு ஆஜராகி, ‘கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேலம், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் நடைபெற இருந்த எழுத்து தேர்வை ரத்து செய்வது என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது’ என்று தகவல் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி எம்.தண்டபாணி, தமிழக அரசின் இந்த முடிவை வரவேற்பதாக கூறினார். இதையடுத்து, வழக்கை வருகிற 27ம் தேதிக்கு தள்ளிவைக்க வேண்டும் என்றும், அப்போது எழுத்துத் தேர்வு தொடர்பான புதிய அறிவிப்பை எந்த குறைபாடுகளும் இல்லாமல் தயாரித்து உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூடுதல் அட்வகேட் ஜெனரல் கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி விசாரணையை வரும் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Cancellation ,districts ,Co-operative Society , Co-operative Society
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்