ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் அரசியலில் ஜொலிக்க முடியாது'கே.எஸ்.அழகிரி கருத்து

நெல்லை: ரஜினியும், கமலும் சேர்ந்தாலும் அரசியலில் ஜொலிக்க முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி கருத்து தெரிவித்தார். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று காலை ரயிலில் நெல்லை வந்தார். அப்போது அவர் அளித்த பேட்டி: உள்ளாட்சி தேர்தல் மறைமுகமாக நடத்த அமைச்சரவையை கூட்டி அதிமுக நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் பங்களிக்காத எந்த தேர்தலும் மக்களுக்கு பயனளிக்காது. மறைமுக தேர்தல் ஜனநாயகத்திற்கு விரோதமானது. மறைமுக தேர்தலால் பணபலமும், படைபலமும் உள்ளவர்கள் அதிகாரத்தை கைப்பற்றும் நிலை ஏற்படும். அதிமுக கொல்லைப்புறமாக உள்ளாட்சி அமைப்புகளை கைப்பற்ற முடிவு செய்துள்ளது. இதனை காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சி தேர்தல், நேரடி தேர்தலாக நடந்துள்ளது. தற்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை பின்பற்றி ஆட்சியை நடத்துவதாகக் கூறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறைமுக தேர்தலை நடத்துவது ஏன்? மக்கள் பணி என்பது வேறு, அரசியல் என்பது வேறு. ரஜினி தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. எம்.ஜி.ஆருக்கு பின் நடிகர்கள் ரஜினியும், கமலும் சேர்ந்து வந்தாலும் அரசியலில் ஜொலிக்க முடியாது. 2021 சட்டமன்ற தேர்தலில் மக்கள் அதிசயத்தை நிகழ்த்துவார்கள் என நடிகர் ரஜினி சொல்வது, அவரது புதிய படத்திற்கான தலைப்பாக இருக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: