×

ரூ.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட குழந்தை தாயிடம் ஒப்படைப்பு

சேலம்: சேலத்தில் ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை நேற்று சமூக பாதுகாப்புத்துறை மூலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. குழந்தையை கையில் வாங்கிய தாய், தந்தை முத்தமிட்டு மகிழ்ந்தனர். சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடுத்த நைனாம்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி மீனா. இவர்கள் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.திருப்பூரில் பனியன் கம்பெனியில் இருவரும் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மீனாவுக்கு திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது மீனாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த தகவல் சேலத்தில் உள்ள மீனாவின் பெற்றோருக்கு தெரிந்தது. அவர்கள் மீனாவை சேலத்திற்கு அழைத்து வந்து, 3 ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர்.

அப்போது மீனாவிடம், குழந்தை மற்றும் கணவர் இறந்துவிட்டதாக கூறினர்.இந்த நிலையில் குணமாகி மீண்டும் திருப்பூருக்கு சென்ற மீனா,கணவர் ராஜாவை சந்தித்து கேட்டபோதுதான் உண்மை தெரியவந்தது. இதையடுத்து மீனா,ராஜா ஆகிய இருவரும் சேலம் வந்து குழந்தை பற்றி கேட்டனர். அதற்கு மீனாவின் பெற்றோர் குழந்தையை ₹3 லட்சத்திற்கு விற்றதாக கூறினர்.இதையடுத்து தனது குழந்தையை மீட்டுத்தரக்கோரி கடந்த 18ம் தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் மீனா, ராஜா ஆகிய இருவரும் மனு அளித்தனர்.இதையடுத்து ஆட்டையாம்பட்டி போலீசார்,விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் உள்ள மீனாவின் உறவு பெண்ணிடமிருந்து குழந்தையை மீட்டு,சேலத்தில் உள்ள லைப்லைன் டிரஸ்டில் ஒப்படைத்தனர். நேற்று மாலை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம், முன்னிலையில் குழந்தை,ராஜா-மீனா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட்டது.குழந்தையை கையில் வாங்கிய தம்பதியர்,குழந்ைதயை முத்தமிட்டு,ஆனந்த கண்ணீர் விட்டனர்.

Tags : Child rescue
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...