மதுரை டாக்டர் ஆந்திராவில் சட்டம் படித்தது எப்படி? ஆய்வு செய்ய பார் கவுன்சிலுக்கு உத்தரவு

மதுரை: மதுரையில் பணியாற்றும் டாக்டர் எப்படி ஆந்திராவில் சட்டம் படித்தார் என்பது குறித்து பார் கவுன்சில் ஆய்வு செய்ய வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. மதுரை, கண்ணனேந்தலைச் ேசர்ந்த பாண்டிச்செல்வி என்பவர் தனது கணவர் கட்டுப்பாட்டில் உள்ள இரு மைனர் குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு உத்தரவிடக்கோரி மனு செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், என்.ஆனந்த்வெங்கடேஷ் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: இந்த மனு விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய அனைவரும் ஆஜராகினர். அப்போது மனுதாரர் சட்டப்படிப்பு முடித்ததால், அவரது கணவரான டாக்டரும், ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள கல்லூரியில் சட்டம் படித்துள்ளார். சட்டப்படிப்பை தொலைதூர கல்வித் திட்டத்தில் படித்ததாகவும், மாதத்திற்கு இரு வகுப்புகளில் பங்கேற்றதாகவும் கூறியுள்ளார்.

இரு மைனர் குழந்தைகளும் தாயுடன் இருக்க விரும்புகின்றனர். இருவரது குடும்ப பிரச்னை தொடர்பான விவகாரத்தை உரிய நீதிமன்றம் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும். இரு மைனர் குழந்தைகளையும் மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். மைனர் குழந்தைகள் இருவரும் தற்போது படிக்கும் பள்ளியிலேயே படிப்பை தொடரலாம். வார இறுதி நாட்களில் ஏதாவது பொது இடத்தில் இரு குழந்தைகளையும் தந்தை சந்தித்து பேசலாம். கிறிஸ்துமஸ், கோடை விடுமுறை போன்ற காலங்களில் குழந்தைகளை வெளியில் அழைத்துச் சென்றால், மனுதாரரிடமும், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

மனுதாரரின் கணவர் தொலைதூர கல்வி திட்டத்தில் சட்டம் முடித்து பார் கவுன்சிலில் பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். தொலைதூர கல்வியில் சட்டம் பயின்றிருந்தால் அதை பார் கவுன்சிலில் எப்படி பதிவு செய்தார். ஒருவேளை நேரடி வகுப்பில் படித்திருந்தால், அவர் டாக்டராக மதுரையில் பணியாற்றிக் கொண்டு எப்படி ஆந்திராவில் படித்தார். ஒரு மாநிலத்தில் வேலை பார்த்துக் கொண்டு மற்றொரு மாநிலத்தில் படித்துள்ளார். எனவே, எப்படி வகுப்பில் பங்கேற்றார், அவரது வருகைப் பதிவேட்டில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து பார் கவுன்சில் தரப்பில் ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: