முரசொலி நிலம் விவகாரம் 48 மணி நேரத்தில் ராமதாஸ் மன்னிப்பு கேட்க வேண்டும்'திமுக வக்கீல் நோட்டீஸ்

சென்னை: முரசொலி நிலம் தொடர்பான விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாஜ கட்சியின் சீனிவாசன் இருவரும் 48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இயக்குனர் வெற்றிமாறன், நடிகர் தனுஷ் கூட்டணியில் ‘அசுரன்’ திரைப்படம் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் பஞ்சமி நிலம் குறித்து பேசப்பட்டிருந்தது. இந்தநிலையில் திரைப்படத்தை பார்த்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் இது படம் அல்ல பாடம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில், திரைப்படத்தை புகழ்ந்து பதிவிட்டிருந்தார். இந்தநிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த பதிவுக்கு எதிராக முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று கருத்து கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் அது பஞ்சமி நிலம் இல்லை என்றும் ஆதாராங்களையும் வெளியிட்டனர்.

இந்தநிலையில், முரசொலி நிலம் தொடர்பாக அவதூறு கருத்து தெரிவித்து வரும் ராமதாசுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் வக்கீல் நீலகண்டன் என்பவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: முரசொலி இடம் குறித்து, தான் பதிவிட்ட டிவிட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும். 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும். வருங்காலத்தில் இது போன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக்கூடாது. இவைகளை தவறும் பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களால் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும். அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும் வக்கீல் நோட்டீசில் கூறப்பட்டுள்ளது. இதே காரணத்துக்காக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஆர்.சீனிவாசனுக்கு ஆர்.எஸ்.பாரதி சார்பில் வழக்கறிஞர் எஸ்.மனுராஜ் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Related Stories: