சுற்றுச்சூழல் சீர்கேடுகளில் இருந்து மக்களை காத்திட வேண்டும்: மாநிலங்களவையில் வைகோ வலியுறுத்தல்

சென்னை: டெல்லி சுற்றுச்சூழல் மாசு குறித்து, மாநிலங்களவையில் நடந்த கவன ஈர்ப்புத் தீர்மான விவாதத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆற்றிய உரை: தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலுக்குப் பெருங்கேடு விளைவிக்கும் வேலிக்காத்தான் எனப்படும் ஜூலி புளேரா மரங்களை அகற்றுவதற்காக விவசாயிகளை திரட்டி ஓர் இயக்கம் நடத்தினேன். உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். சிறிது காலம் அரசும் அக்கறை காட்டியது. இப்போது வழக்கு நிலுவையில் இருக்கிறது.

தமிழ்நாட்டில் மாசு படர்வதற்குப் பேராபத்து, மத்திய அரசின் திட்டங்களாகத்தான் இருக்கின்றன. மீத்தேன், ஹைட்ரோகார்பன், பாறைப் படிம எரிகாற்றுத் திட்டங்களால், தமிழ்நாட்டின் காவிரி தீரம் நாசம் ஆகும். மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டங்களால், சுற்றுச்சூழல் மாசு எனும் பேராபத்து, தலைக்கு மேல் கத்தியாகத் தொங்குகிறது. கர்நாடகத்துக்காரர்கள், காவிரித் தண்ணீர் கொடுப்பது இல்லை என்ற முடிவில் இருக்கிறார்கள். இன்று இந்த விவாதத்தில், டில்லி சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்துத்தான் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டினர். மாசு அடர்த்திப் புகை, அனைத்து மக்களையும் பாதிக்கின்ற பிரச்னை. அதனைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள், மக்களைக் மீட்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

‘வானூர்திகளில் தமிழ் ஒலிக்கட்டும்’

வானூர்திப் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கங்கள், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. பயணிகளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. கோலாலம்பூர், சிங்கப்பூர் போல இந்திய வானூர்திகளின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும். குறைந்தது மாநிலத்துக்கு உள்ளேயே பறக்கின்ற வானூர்திகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.

Related Stories: