தொழிலதிபர் என்ற போர்வையில் மாடல் அழகிகளை ஏமாற்றி பலாத்காரம் பெங்களூருவில் சென்னை வாலிபர் கைது

பெங்களூரு: மருத்துவமனை உரிமையாளர் மற்றும் ஓட்டல் அதிபர் என்று கூறி, தமிழகம் மற்றும் பெங்களூரு, ஐதராபாத்தை சேர்ந்த இளம் பெண்கள், மாடல் நடிகைகளை ஏமாற்றி ஓட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்து வந்த தமிழக வாலிபரை பெங்களூரு கிழக்கு மண்டல போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு நகரில் வேலை தேடி வரும் இளம் பெண்கள் மற்றும் நடிக்க வேண்டுமென்ற ஆசையில் இருக்கும் இளம் மாடலிங் பெண்களை மர்ம நபர் ஒருவர் எம்.எல்.ஏ மகன் மற்றும் ஓட்டல், மருத்துவமனை உரிமையாளர் என்று கூறி, கடத்தி சென்று பலாத்காரம் மற்றும் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்கள் வந்து கொண்டே இருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பெங்களூரு அல்சூர் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். வேலை தேடி பெங்களூரு வந்த பெண்ணிடம் கார்த்திக் ரெட்டி என்பவர் தனியார் ஓட்டல் உரிமையாளர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் என்று கூறி அறிமுகம் செய்து கொண்டுள்ளார். விரைவில் உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன் என்று உறுதி அளித்ததும் அவர் மீது அப்பெண்ணுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் நெருங்கி பழக ஆரம்பித்தார்.

இருவரும் தனிமையில் சுற்ற தொடங்கினர். திடீரென்று ஒரு நாள் கார்த்திக்ரெட்டி அந்த பெண்ணை அல்சூர் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வரவழைத்துள்ளார். அங்கு இளம்பெண் பெயரில் அறை எடுத்த அவர், திருமண ஆசை காட்டி பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு தப்பி ஓடிவிட்டார். சந்தேகம் அடைந்த இளம் பெண் ஓட்டல் ஊழியர்களிடம் விசாரித்தபோது, கார்த்திக் என்ற பெயரில் அறை எதுவும் புக் செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றம் அடைந்ததை அறிந்த இளம் பெண், ஓட்டலுக்கான கட்டணத்தை செலுத்திவிட்டு திரும்பியதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட கார்த்திக் என்ற வாலிபரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவரிடம் இருந்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. இது குறித்து பெங்களூரு கிழக்கு மண்டல துணை கமிஷனர் சரணப்பா கூறியதாவது;

பெங்களூரு நகரில் சினிமா வாய்ப்பு, வேலை தேடி வரும் இளம் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்ல காத்திருக்கும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி, அவர்களை அழைத்து சென்று பலாத்காரம் செய்து விட்டு தலைமறைவாகி விடுவது மற்றும் பாலியல் தொல்லை கொடுப்பது என்று பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வந்த கார்த்திக் ரெட்டி என்ற வாலிபரை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவரது உண்மை பெயர் ஜஹாங்கீர் (30) என்று தெரியவந்தது. எம்.பி.ஏ பட்டதாரியான இவர், சென்னையில் உள்ள கிரீன் கோக்கநெட் ஓட்டலில் குரூப் மேலாளராக வேலை பார்த்து வந்தவர். ஓட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சாதுரியமாக பேசும் திறன் கொண்ட இவர், பெண்களை அதிகளவு கவர தொடங்கினார். ஆரம்பத்தில் சின்ன சின்ன பொய்களை கூறி பெண்களை ஏமாற்றி வந்த இவர், சொகுசு வாழ்க்கை மற்றும் சுகத்துக்கு அடிமையானார். இதற்காக டிப்டாப்பாக உடை அணிந்து கொண்டு, வேலை தேடி அலையும் பெண்கள் மற்றும் தனது ஓட்டலுக்கு வரும் பெண்களை குறி வைத்து, மோசடியில் ஈடுபட தொடங்கினார். பெண்களிடம் தான் ஓட்டல் உரிமையாளர், மருத்துவமனை சொந்தமாக உள்ளது. பிரபல அரசியல் பிரமுகரின் மகன் என்று கூறி, அவர்களை தனது காதல் வலையில் விழ வைப்பார். பின்னர் அந்த பெண்களை தனியார் ஓட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு, தப்பியோடிவிடுவார்.

இது தொடர்பாக தமிழகத்தில் ஏராளமான வழக்குகள் இவர் மீது பதிவாகியுள்ளன. தமிழகத்தில் இருந்து பெங்களூரு தப்பி வந்த இவர், எம்.ஜி ரோடு பகுதியில் தனியாக நின்ற பெண்ணிடம், தன்னை முன்னாள் எம்.எல்.ஏவின் மகன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண் வேலை தேடி வந்திருப்பதை அறிந்த அவர் தனக்கு சொந்த ஓட்டல் இருப்பதாகவும் அதில், வேலை வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறினார். இதை அந்த பெண் நம்பியதும், வேலை உறுதி சான்றிதழ் அளிப்பதாக தனியார் ஓட்டலுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இதுதவிர மே.23ம் தேதி திருப்பதி சென்று ஐதராபாத்திற்கு திரும்புவதற்காக காத்திருந்த இளம் பெண்ணிடம், கார்த்திக் ரெட்டி என்ற பெயரை பயன்படுத்தி, அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் அந்த பெண்ணிடம் எந்த ஊர் செல்லவேண்டுமென்று விசாரித்து விட்டு, அவர் ஐதராபாத் என்றதும், நானும் அங்குதான் செல்கிறேன், நான் டிராப் செய்கிறேன் என்று நம்ப வைத்துள்ளார்.

கை குழந்தையுடன் நின்ற அந்த பெண், கார்த்திக் ரெட்டியின் பேச்சை நம்பி காரில் ஏறினார். வழியில் இளம் பெண்ணை குறித்த அனைத்து விவரங்களையும் பெற்ற அவர், குழந்தைக்கு பால் வாங்கி வருவதாக வாகனத்தை நிறுத்தினார். இதை ஏற்ற அந்த பெண் தன்னிடம் இருந்த கிரெடிட் கார்டை கொடுத்தார். அதை வாங்கிய கார்த்திக் வெளியே சென்று ரூ.40 ஆயிரம் எடுத்து கொண்டு, பெண்ணிடம் வந்து, பால் இல்லை. வேறு இடத்தில் வாங்கி கொள்ளலாம் என்று அழைத்து சென்றார். பின்னர் வேறொரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி, பெண்ணுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார். அவர் சாப்பிட்டு கொண்டிருந்த இடைப்பட்ட நேரத்தில், கழிவறை சென்று வருவதாக கூறி விட்டு, வாகனத்துடன் தப்பியோடிவிட்டார்.

இதேபோன்று நடிப்பில் ஆர்வமாக இருந்த இளம் பெண் ஒருவரிடம் நடிகர் என்று கூறி, மைசூருக்கு அழைத்து சென்று ஓட்டலில் புக் செய்து, அந்த பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை பெங்களூருவில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவுக்கு அழைத்து வந்து, இளம் பெண்ணுடன் பொழுதை கழித்துவிட்டு, தாயை பார்த்து வருவதாக கூறி சென்றுவிட்டார். மறுநாள்தான் அந்த பெண்ணுக்கு தான் ஏமாற்றப்பட்டிருப்பது தெரியவந்தது. இதேபோன்று பல பெண்களிடம் வேலை வாங்கி தருவதாகவும், நடிப்பதற்கு வாய்ப்பு கொடுப்பதாகவும், டிராப் செய்வதாகவும் அழைத்து பலாத்காரம், பாலியல் தொல்லை, பண மோசடி என்ற பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சில பெண்கள் மற்றும் தைரியமாக முன் வந்து போலீசில் புகார் அளித்துள்ளனர். சிலர் புகார் அளிக்காமல் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்தனர். சில பெண்கள் மானத்திற்கு பயந்து, புகார் அளிக்க முன்வரவில்லை. பெங்களூரு மட்டுமின்றி, ஆந்திரா, தமிழகத்தில் இதுபோன்று கைவரிசை காட்டியுள்ளார். தற்போது பெங்களூரு அல்சூர்கேட் போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்து, நடவடிக்கை எடு த்து வருகின்றனர். இவ்வாறு துணை கமிஷனர் சரணப்பா தெரிவித்துள்ளார்.

Related Stories: