10% இடஒதுக்கீட்டை அமலாக்கக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை: பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கான 10 சதவீத கூடுதல் ஒட ஒதுக்கீடுக்கு எதிராக தமிழகத்தின் விடுதலை சிறுத்தைகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம், பிஜூ ஜனதாதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சமத்துவத்திற்கான இளைஞர்கள் சங்கம் ஆகியோரின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது. இந்த நிலையில், மேற்கண்ட 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், 10 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தை இன்னும் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை. உடனே அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம், தமிழகம், கர்நாடகம் மற்றும் மத்திய அரசு ஆகியோர் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,”தமிழகத்தை பொறுத்தவரை 69 சதவீத இடஒதுக்கீடு என்பது, பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையின் மூலமாக கணக்கெடுத்து அதன் அடிப்படையில் வழங்கப்பட்டு வரப்படுகிறது. இதனை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னிலையிலும் நிரூபித்து உறுதி செய்த பின்னர் தான் கடைபிடித்தும் வருகிறோம். அதனால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. அவரது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: