கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.1,442 கோடியில் 4,802 புதிய பஸ்கள்

சென்னை: அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் தலைமையில் இயக்குநர் குழு கூட்டம் கடந்த 18.11.2019 முதல் 22.11.2019 வரை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், முதலமைச்சர் 110 விதியின் கீழ், சட்டமன்ற பேரவையில் அறிவித்த புதிய அறிவிப்புகளை செயல்படுத்துதல், போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள், செலவீனங்களை குறைத்து நிதி நிலையை மேம்படுத்துதல், பணியாளர்களின் பதவி உயர்வு, பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விரைந்து முடித்தல், பணிமனைகளை பழுது நிவர்த்தி செய்தல், பழைய பேருந்துகள் மற்றும் அலுவலக வாகனங்களை கழிவு செய்தல், சட்டமன்றத்தில் போக்குவரத்துத்துறை மானிய கோரிக்கையில், போக்குவரத்துதுறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ள புதிய அறிவிப்புகளை விரைந்து செயல்படுத்துதல், முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட புதிய பேருந்துகளின் இயக்கம் மற்றும் வசூல் நிலவரம், உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்து விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டன.

 

இறுதியாக, தலைமை வகித்த போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் பேசியதாவது: கடந்த மூன்று ஆண்டுகளில் 1,442 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4,802 புதிய பேருந்துகள், போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்கப்பட்டு, இயக்கப்பட்டு வருகிறது. இப்பேருந்துகளில் குளிர்சாதன வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட தற்போதைய கால கட்டத்திற்கு தேவையான அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பேருந்துகள் பொதுமக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனை நல்லமுறையில் பராமரித்து வருவாயினை பெருக்கிட வேண்டும்.

முதல்வர் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், போக்குவரத்துக் கழகங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்றும், அரசு நிறுவனங்களின் நிதி ஆதாரம் மூலம் 10 அரசு போக்குவரத்துக்கழக பணிமனைகள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். துணை முதல்வர் நடப்பு நிதியாண்டின் துணை மதிப்பீட்டில், போக்குவரத்துக் கழகங்கள் மேம்பாடு மற்றும் பணியாளர்களின் ஓய்வுகால பலன்கள் வழங்குவது, பள்ளி மாணவர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்குவது உள்ளிட்ட இனங்களுக்கு ஏறத்தாழ 1,912 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அறிவித்தார்.

அந்தவகையில் 8 போக்குவரத்துக்கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6,283 பணியாளர்களுக்கு 1,093 கோடிக்கான பணப்பயன்களை முதல்வர் வழங்கி தொடங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் உள்ள 321 பணிமனைகளில் பணிபுரியும் 1.27 லட்சம் பணியாளர்களின் நலன்கள், பணிமனைகள் மற்றும் பணியாளர் தங்கும் அறைகள் குறித்து உரிய ஆய்வும், பாதுகாப்பு தணிக்கையும் நடந்து வருகிறது. சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் 16 பணிமனைகள் முதற்கட்டமாக மேம்படுத்தப்பட உள்ளன. பல்வேறு செயல்திறனுக்காக அரசு போக்குவரத்துக்கழகங்கள் 9 விருதுகளை பெற்றுள்ளது. இதற்காக பணியாற்றிய அனைத்து பணியாளர்களையும் மற்றும் அலுவலர்களையும் பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், மாற்றுத் திறனாளிகளுக்கென 10 பேருந்துகள் குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது வடிவமைக்கப்படும் புதிய பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் தங்கள் சக்கர நாற்காலியுடனேயே பேருந்தில் ஏறி பயணம் செய்திட ஏதுவாக வடிவமைக்கப்பட்டு கூடிய விரைவில் இயக்கப்பட உள்ளது. நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் 525 மின்சாரப்பேருந்துகளை வாங்கி இயக்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பிஎஸ்-6 தரத்திலான 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 1,580 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 500 மின்சாரப் பேருந்துகளும் மற்றும் பிஎஸ்-6 தரத்திலான 2,213 புதிய பேருந்துகளும் வாங்குவதற்கான திட்டம் கையெழுத்தானது. பொதுமக்களின் சேவைகளில் ஈடுபட்டுள்ள நடத்துநர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவற்றை உடனுக்குடன் களைந்திட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: