ஐஐடி மாணவி மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரிய மனு மீது தீர்ப்பு தள்ளிவைப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஐஐடி மாணவி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய தேசிய மாணவர் சங்கத்தின் தமிழக பிரிவு தலைவர் அஸ்வத்தாமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: சென்னை ஐ.ஐ.டியில் படித்து வந்த கேரள மாநில மாணவி பாத்திமா லத்தீப் கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கில் சடலமாக தொங்கினார். கடந்த இரண்டு ஆண்டுகளில் 5 மாணவர்கள் இதுபோல மர்மமான முறையில் இறந்துள்ளனர். எனவே, மாணவி பாத்திமா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், மாணவி பாத்திமா மரணம் குறித்த வழக்கை பெண் கூடுதல் துணை கமிஷனர்தான் புலன்விசாரணை செய்கிறார். இந்த விசாரணையை கூடுதல் போலீஸ் கமிஷனர் மேற்பார்வையிடுகிறார். இந்த 2 போலீஸ் அதிகாரிகளும் சி.பி.ஐ.யில் ஏற்கனவே பணியாற்றி அனுபவம் உள்ளவர்கள். விசாரணை துரிதமாகவும், நேர்மையாகவும் நடந்து வருகிறது. எனவே, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தேவையில்லை என்று வாதிட்டார். இதையடுத்து, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் ஜான் பாலிடம், ‘சி.பி.ஐ. விசாரணை கோரி அரசுக்கு கடந்த 18ம் தேதி இ-மெயில் மூலம் மனு அனுப்பி விட்டு உடனே வழக்கை தாக்கல் செய்துள்ளீர்களே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் வக்கீல், இது முக்கியமான பிரச்னை என்றார். இதையடுத்து, நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Related Stories: