வேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே பிப்ரவரி மாதத்திற்குள் பறக்கும் ரயில் இயக்க திட்டம்

சென்னை: வேளச்சேரி-பரங்கிமலை மார்க்கத்தில் ஆதம்பாக்கம் வரை வரும் பிப்ரவரி மாதத்திற்குள் பறக்கும் ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. படிப்படியாக பணிகள் முடிந்து சேப்பாக்கம், மயிலாப்பூர், திருவான்மியூர் மற்றும் வேளச்சேரி வரை அடுத்தடுத்து ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. வேளச்சேரி வரை பறக்கும் ரயில் திட்டம் நீட்டிக்கப்பட்டதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதலில் 6 பெட்டிகளுடன் ரயில்கள் இயக்கப்பட்டன. பின்னர், பயணிகளின் வரவேற்பை தொடர்ந்து தற்போது 9 பெட்டிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் கடற்கரை - வேளச்சேரி வரை இயக்கப்பட்ட பறக்கும் ரயில் சேவையை, பரங்கிமலை வரை நீட்டிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்தது. அதன்படி, வேளச்சேரி அடுத்து புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வேளச்சேரியில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 25 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு நிலம் ஒதுக்கியது. இந்த திட்டத்தை ரூ.1,170 கோடி செலவில் செயல்படுத்த திட்டமிடப்பட்டது.

கடந்த 2007ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. தற்போது 11 ஆண்டுகள் ஆகி விட்டது. ஆனாலும் வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை இன்னும் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்படவில்லை. வேளச்சேரி - புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் வரை தண்டவாளம் அமைக்கும் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. ஆனால் ஆதம்பாக்கம் முதல் பரங்கிமலை இடையே சுமார் 500 மீட்டர் தொலைவிற்கு நிலத்தை கையகப்படுத்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால், வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டம் கடந்த 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது.

இதற்கிடையில், தெற்கு ரயில்வேக்கு தமிழக அரசு ஒதுக்கிய நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி ரயில்வேயிடம் ஒப்படைக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட 97 பேர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. தனிநீதிபதியின் உத்தரவில் தலையிட முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் தென்சென்னை திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியனை சந்தித்து வேளச்சேரி- பரங்கிமலை ரயில் சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக அவர், மத்திய ரயில்வே அமைச்சரை சந்தித்து இத்திட்டத்தை விரைந்து முடித்து ரயில்கள் இயக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

அதன் காரணமாக, ரயில்வே திட்ட பணிகள் மறுபடியும் தொடங்கி தண்டவாளம், மின்கம்பங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் என கிட்டத்தட்ட 60 சதவீதத்திற்கும் மேல் பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, வரும் பிப்ரவரி மாத இறுதிக்குள் வேளச்சேரி- ஆதம்பாக்கம் இடையே மீதமுள்ள பணிகள் முடிக்கப்பட்டு பறக்கும் ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பரங்கிமலை வரையிலான அடுத்த கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

Related Stories: