மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: தொமுச கோரிக்கை

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அலுவலகத்தில், தொமுச சார்பில் நிர்வாகிகள் சரவணன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக மின்வாரியத்தில் 20 ஆயிரம் கள உதவியாளர் பதவியும் 8000க்கும் மேற்பட்ட கம்பியாளர் பதவியும், ஆக 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் இருந்தாலும் அதில் பல ஆண்டுகளாக வாரியத்துக்காக உழைத்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதில்லை. அது மட்டுமில்லை, அவர்களுக்கு கூலியைக் கூட முறையாக கொடுப்பது இல்லை. தமிழகத்தில் கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை பேரிடர் சமயத்தில் முழுவதுமாக பணியாற்றியது ஒப்பந்த தொழிலாளர்கள்தான். கடந்த ஆண்டு கஜா புயலின் போதும் சரி, அதற்கு முன்பான வர்தா புயல் சமயங்களிலும் சரி அப்பகுதியின் நிலைமைகளை சீராக்கியது ஒப்பந்த தொழிலாளர்களின் ஈடு இணையற்ற உழைப்புதான் என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கேங்மேன் என்ற பதவியை உருவாக்கி கடந்த மார்ச் மாதத்தில் 5000 கேங்மேன் பதவிகளை நிரப்ப அறிவிப்பினை வெளியிட்டது. காலிப்பணியிடங்களை நிரப்ப ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு எந்த ஒரு வாய்ப்பும் அளிக்காமல் கேங்மேன் என்ற புதிய பதவியை நேரடி தேர்வு மூலம் நிரப்புவதற்கு உண்டான அறிவிப்பினை வெளியிட்டது.

இதை எதிர்த்து உடனடியாக தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன. கேங்மேன் பதவியை ரத்து செய்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களையும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: