இன்று அதிகாலை கனவில் வந்து மிரட்டியது; பேய் பீதியில் கிணற்றில் குதித்த வாலிபர்

புதுக்கடை: புதுக்கடை அருகே பேய் பீதியில் கோயில் கிணற்றுக்குள் விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் மீட்டனர். குமரி மாவட்டம் ஐரேனிபுரம் அருகே அயனிவிளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (34) கூலி தொழிலாளி. இன்று அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். திடீரென படுக்கையில் இருந்து எழுந்தார். தொடர்ந்து வீட்டில் இருந்து வேகமாக வெளியே ஓடினார். இதை வீட்டில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. என்னை ஒன்றும் செய்யாதே. விட்டு விடு என அலறியவாறு ஓடிய ஸ்டீபன், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள நாகதேவி கோயிலுக்குள் சென்று, அந்த கோயில் வளாகத்தில் உள்ள கிணற்றில் குதித்தார். திடீரென கிணற்றில் ஏதோ சத்தம் கேட்டு, கோயில் அர்ச்சகர் பார்த்தார். அப்போது ஸ்டீபன், தண்ணீரில் நின்று கொண்டு இருந்தார். உடனடியாக அர்ச்சகர் கூச்சலிட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் குழித்துறை தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சுமார் அரை மணி நேரம் போராடி ஸ்டீபனை வெளியே மீட்டனர். அவருக்கு சிறு, சிறு காயங்கள் இருந்ததால், முதல் உதவி சிகிச்சைக்கு பின் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் புதுக்கடை போலீசாரும்  வந்து விசாரணை நடத்தினர். கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட ஸ்டீபனிடம் போலீசார் கேட்ட போது, அவர் கூறிய தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததுடன், சிரிக்கவும் வைத்தது. அவர் போலீசில் கூறுகையில், இன்று அதிகாலை நான் நன்றாக தூங்கி கொண்டு இருந்தேன். அப்போது 3 பேய்கள் என் கனவில் வந்தன.

நீ எங்களுடன் வந்து விடு. நாங்கள் உன்னை விட மாட்டோம் என்றன. அந்த உருவங்களை பார்த்ததும் நான் அதிர்ச்சி அடைந்தேன். என்னை ஒன்றும் செய்யாதீர்கள் என கூறிக்கொண்டு ஓட தொடங்கினேன். அந்த பேய்கள் என்னை துரத்தின. கடைசியாக நான் கோயில் கிணற்றுக்குள் விழுந்தேன். கிணற்றில் விழுந்தது கனவு தான் என்று நினைத்தேன். தண்ணீருக்குள் விழுந்த பின் தான் உண்மையிலேயே கிணற்றுக்குள் விழுந்ததை நான் உணர்ந்தேன் என்றார்.  இதை கேட்டதும் போலீசாரும் சிரித்தனர். இதற்கிடையே ஸ்டீபன் கூறும் தகவல் நம்பும்படியாக இல்லை என அந்த பகுதி பொதுமக்கள் கூறி உள்ளனர். ஏற்கனவே இந்த கிணற்றுக்குள் புதையல் இருப்பதாக கடந்த சில நாட்களாக வதந்தி உள்ளது. எனவே  புதையல் எடுக்கும் நோக்கத்துடன் யாராவது ஸ்டீபனை கிணற்றுக்குள் விழ வைத்து இருப்பார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Related Stories: