×

கோவையில் இளம் பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை : ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: கோவையில் இளம் பெண் ராஜேஸ்வரி விழுந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் எதுவும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்துள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 11ம்தேதி சென்னையில் இருந்து விமானத்தில் கோவை வந்தார். அவரை வரவேற்று, அவினாசி ரோட்டில் பல இடங்களில் சாலையோரம் அ.தி.மு.க. கொடிக்கம்பம் வைக்கப்பட்டிருந்தது. அன்றையதினம், பீளமேடு கோல்டு வின்ஸ் பகுதியில் சாலையோரம் நடப்பட்டிருந்த 15 அடி உயர சவுக்கு கொடிக்கம்பம் சாய்ந்து ரோட்டில் விழுந்தது. அப்போது அவ்வழியாக லாரியை ஓட்டி வந்த டிரைவர், லாரி மீது கொடிக்கம்பம் விழாமல் இருக்க லாரியை சற்று திருப்பினார். அப்போது அவ்வழியாக மொபட்டில் சென்ற ராஜேஸ்வரி (22), பைக் ஓட்டி வந்த விஜய் ஆனந்த் ஆகியோர் மீது லாரி மோதியது.

இதில் ராஜேஸ்வரி கீழே விழுந்தார். லாரியின் சக்கரம் ராஜேஸ்வரி காலில் ஏறி இரு கால்களும் நசுங்கியது. இதேபோல விஜய் ஆனந்த் காயமடைந்தார்.  விஜய் ஆனந்த் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜேஸ்வரி, கோவை நீலம்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனம் எழுந்தது.

இந்நிலையில் சட்டவிரோத பேனர் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மற்றும் சுபஸ்ரீ மரணத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷாயி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோயம்புத்தூரில் இளம் பெண் ராஜேஸ்வரிக்கு விபத்து நடந்த இடத்தில் அதிமுக கொடிக்கம்பம் இல்லை எனவும், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பேனர் வைக்க யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றும் அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் தெரிவித்திருந்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள் அரசியல் கட்சி பேனர் விழுந்து இறப்பவர்களின் குடும்பத்துக்கு அந்த கட்சியிடமே ஏன் நிர்வாகம் நிவாரணம் வசூலிக்க கூடாது என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Tags : place ,AIADMK ,Rajeshwari ,Goa ,Govt ,Rajeswari ,Coimbatore Ilambune ,Tamil Nadu Government ,Chennai High Court , Coimbatore Ilambune, Rajeswari, Chennai High Court, Tamil Nadu Government, AIADMK Flag
× RELATED 3வது இடத்துக்கு சீமானுடன்தான் போட்டி...