மூணாறில் வாகன ஓட்டிகள் பீதி கனமழை உருவாக்கிய கிடு கிடு பள்ளம்

மூணாறு : மூணாறில் முக்கிய சுற்றுலாத் தலமான மாட்டுப்பட்டி செல்லும் சாலையில் கனமழை மூலம் உருவான பள்ளம் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, உடனே இந்த பள்ளத்தை சரிசெய்ய பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மூணாறில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனமழை பெய்தது. இதனால் முக்கிய சுற்றுலாத் தலமான மாட்டுப்பட்டி செல்லும் வழியில்  மிக பெரிய பள்ளம் ஏற்பட்டது. மாட்டுப்பட்டி மூணாறில் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படுகிறது.  இப்பகுதி எக்கோ பாயிண்ட் , குண்டலை அணை, டாப் ஸ்டேஷன், கோவிலூர், வட்டவடை போன்ற பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.

 மூணாறு -மாட்டுப்பட்டி சாலை  வழியில்  ஹைரேஞ் பள்ளி ,கர்மலாகிரி பள்ளி  அமைந்துள்ளன. தினந்தோறும் இப்பள்ளிகளுக்கு இந்த பள்ளமான சாலைவழியே தான் மாணவ, மாணவிகள்  அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும் ஏரளமான சுற்றுலாப் பயணிகள் ,தோட்டத்தொழிலாளர்கள் வந்து செல்லும் இந்த முக்கிய சாலையில் கனமழை மூலம் ஏற்பட்ட பள்ளம் வாகன ஓட்டுனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஒவ்வெரு நாளும் அச்சத்துடன் வாகனத்தை ஓட்டி செல்லவேண்டிய நிலை  உருவாகியுள்ளது இந்த சாலைகளை சீரமைக்க பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.  

சாலைகளை சீரமைத்து வந்த ஒப்பந்தக்காரர்கள்  முன்னறிவிப்பின்றி பாதியிலேயே  வேலைகளை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் இச்சாலையில் வாகனகங்கள் செல்கின்றன. மேலும் பள்ளம் உருவான இடத்தில் எச்சரிக்கை பலகைகள் மற்றும் பாதுகாப்பு வேலிகள் இல்லாத காரணத்தால் இரவு நேரத்தில் சாலை வழியாக கடந்து செல்லும் வாகனங்களுக்கு விபத்து ஏற்படும் அபாய நிலை உருவாகியுள்ளது. எனவே, சேதமடைந்த இந்த சாலையை சீரமைக்க  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அப்பகுதியைச் சேர்ந்த தாமஸ் கூறுகையில், `` கடந்த வருடம் கனமழை மூலம் ஏற்பட்ட இந்த மிக பெரிய பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் அலட்சியப்போக்கு காட்டுகின்றனர். பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் ,மாணவ, மாணவிகளின் நிலையை கருத்தில் கொண்டு சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை உடனடியா க சீர் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இப்பகுதி மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்’’ என்று கூறினார்.

Related Stories: