இந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன என்று நாடாளுமன்றத்தில் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடரில், பிளாஸ்டிக் கழிவுகள் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு எழுத்தப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சியுடன், நுகர்வோர் பொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால், வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்கள் துறையில்(எஃப்.எம்.சி.ஜி) அதிகரித்த பயன்பாட்டின் காரணமாக பிளாஸ்டிக்கின் தேவை கணிசமாகவும் அதிகரித்துள்ளது. இது மறைமுகமாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரிப்பதற்கும் வழிவகுத்துள்ளது.

பிளாஸ்டிக்கின் ஆயுள், வலிமை, மந்தமான நடத்தை, குறைந்த செலவு போன்ற காரணங்களால் பிளாஸ்டிக் தொழில் வேகமாக வளர தொடங்கியது. ஆனால், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பிளாஸ்டிக், கழிவு மேலாண்மையில் பெரும் சவாலாக உள்ளது, என்று கூறியுள்ளார். பிளாஸ்டிக்குக்கு மாற்றாக சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத பொருளை தயாரிப்பது குறித்த மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தயாரிப்பதற்கு மலிவான செலவு, நீண்ட ஆயுள் போன்ற நேர்மறை காரணங்கள் பிளாஸ்டிக்கில் உள்ளதால், அதற்கான மாற்றீட்டை கண்டுபிடிப்பது மிகவும் சவாலான ஒன்று என்று கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்துள்ள தரவுகளின்படி, நாடடில் உள்ள 60 முக்கிய நகரங்களில் ஒரு நாளைக்கு மட்டும் 4,059 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன.

அந்த வகையில், நாடு முழுவதும் ஒரு நாளைக்கு 25,940 டன் கழிவுகள் உருவாகின்றன. பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் 4,773 பதிவு செய்யப்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள், ஒரு நாளைக்கு 15,384 பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து மறுசுழற்சி செய்கின்றன. இது, 25,940 டன் கழிவுகளில் 60% அளவாகும். ஆனால், மீதமுள்ள 40%, அதாவது 10,556 டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படாத நிலையில் சுற்றுச்சூழலில் சிதறிக்கிடக்கிறது. இதனை ஒழிக்கும் வகையில், பிளாஸ்டிக் மீதான உரம் அல்லது மக்கும் தொழில்நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு தொடர்பாக மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்) ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டுக்குள் ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: