×

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் சேர்ந்து ஆட்சியமைத்தாலும் நீண்டகாலம் நீடிக்காது : நிதின்கட்கரி

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் சேர்ந்து ஆட்சியமைத்தாலும் நீண்டகாலம் நீடிக்காது என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். 3 கட்சிகளுக்கும் வெவ்வேறு கொள்கைகள் இருப்பதால் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது என்று நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். பாஜ - சிவசேனா கட்சிகள் உறவு சட்டப்பேரவை தேர்தலுக்கு பின் முறிந்ததால், கடந்த 12ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து சிவசேனா தங்களது தலைமையில் ஆட்சி அமைக்க முயன்று வருகிறது.

பல கட்ட பேச்சுவார்த்தைகள் முடிவுற்ற நிலையில், நேற்று டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீட்டில், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. அதில், சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி ஒப்புதல் அளித்து விட்டதாகவும், இதற்கான முறையான அறிவிப்பு இன்று அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. மூன்று கட்சிகளும் தங்களுக்குள் ஏற்படுத்திக் கொண்ட குறைந்தபட்ச செயல்திட்டத்தின்படி, முதல்வர் பதவியை சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் சுழற்சி முறையில் தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ளவும், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி 5 ஆண்டுகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி, முதல் இரண்டரை ஆண்டுகள் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலேவும் முதல்வர்களாக பதவி வகிப்பார்கள். ஆனால், ஏற்கனவே முதல்வர் பதவி 5 ஆண்டு காலமும் சிவசேனாவே கேட்டுவந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் வைத்த செக்கால், இரண்டரை கால திட்டத்துக்கு ஒத்துக் கொண்டது. எப்படியாகிலும், மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை முதலில் கைப்பற்ற சிவசேனா செய்த கனவு பலிக்கும் என்றே தெரிகிறது. புதிய அரசு அமைய வாய்ப்புள்ளதால் ஜனாதிபதி ஆட்சி முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

Tags : Nationalist ,Congress ,Shiv Sena ,Nitin Gadkari ,Maharashtra ,BJP ,Republican , Maharashtra, Congress, Shiv Sena, Nationalist Congress, Nitin Gadkari, BJP, Republican
× RELATED சொல்லிட்டாங்க…