தமிழ் தெரியாதவர்கள் தேர்வெழுதும் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

சென்னை: கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்வில் தமிழ் தெரியாதவர்களும் கலந்து கொள்ளலாம் என பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கான தேர்வில் தமிழ் பேச, எழுத தெரியாத மற்ற மாநிலத்தவர்களும் பங்கேற்கலாம் என அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோல் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் வழக்கறிஞர்கள் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து, அரசாணையை திரும்ப பெற வலியுறுத்தி நீதிமன்றம் எதிரே வழக்கறிஞர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மதுரையில் நீதிமன்றத்திற்கு முன் 150க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் அதிகப்படியான வடமாநிலத்தவர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கையை கைவிட வேண்டும் என அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories: