ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியில் படித்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப், கடந்த 9ம் தேதி விடுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். வகுப்பில் முதலிடம் பிடிக்கும் மாணவியின் இந்த மரணம் ஒட்டுமொத்த மாணவ சமூகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பெற்றோரிடம் இருந்து பிரிந்து இருந்த நிலையில் மன அழுத்தத்தில் பாத்திமா இருந்ததாக அவருடன் இருந்த சக மாணவிகள் தெரிவித்ததாக கூறி விடுதி காப்பாளர் லலிதா தேவி, கொடுத்த தகவலின் அடிப்படையில், கோட்டூர்புரம் காவல்நிலையம் வழக்கு பதிவு செய்திருந்தது. தற்போது இந்த வழக்கு விசாரணையானது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காவல்துறையும் ஆதாரங்களை அழிக்க முயற்சிப்பதாக பாத்திமாவின் தந்தையும் பேட்டியளித்திருந்தார்.

இதுமட்டுமல்லாமல் கடந்த 2018ம் ஆண்டு முதல் இந்தாண்டு நவம்பர் வரை சென்னை ஐஐடியில் 5 மாணவர்கள் இதே போல் மர்மான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ச்சியாக இத்தகைய மரணங்கள் நடந்து வருவதாலும், பாத்திமா மரணத்திலும் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாலும் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கோ அல்லது தனி விசாரணை அமைப்புகளுக்கோ மாற்றி உத்தரவிட கோரி தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் தமிழக தலைவர் அஸ்வத்தமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கானது நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவி மரணம் தொடர்பான வழக்கை மத்திய குற்றப்பிரிவு விசாரித்து வருவதாகவும், சிபிஐயில் பணியாற்றிய அதிகாரிகள் மத்திய குற்றப்பிரிவு குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் அரசு தரப்பு வாதிட்டது. இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: