×

தமிழகத்தில் அமைய உள்ள 37 மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை : பெருமிதத்துடன் முதல்வர் பழனிசாமி 70 நிமிடங்கள் உரை

தென்காசி : புதிய மாவட்ட உருவாக்கத்திற்கும் உள்ளாட்சி தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். நெல்லையிலிருந்து புதிதாக உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.முதல்வர் பழனிசாமி நேரில் தொடங்கி வைத்த தென்காசி மாவட்டம் தமிழகத்தின் 33வது மாவட்டமாகும்.புதிய மாவட்டத்திற்கான நிறைவுற்ற திட்டப் பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசியது குறிப்புகளாக பின்வருமாறு...

*உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.ஏற்கனவே வரையறுக்கப்பட்ட வார்டுகளின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.

*தென்காசி மக்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய மாவட்ட தலைநகருக்கு 50 கிமீ தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.

*தென்காசி மாவட்டத்தில் புதிதாக சங்கரன்கோவில் வருவாய் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.251 வருவாய் கிராமங்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ளன. தென்காசி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளடங்கியுள்ளன.

*உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்

*110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 453 அறிவிப்புகளில் 368 அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.

*ராமநதி - ஜம்பு நதி இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

*ஜம்புநதி மேல்மட்ட கால்வாய் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். ஆலங்குளம், சங்கரன்கோவில் பகுதிகளில் அரசு கலைக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

*செண்பகவல்லி அணை - கன்னியா மதகு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

*தமிழகத்திலுள்ள குளங்கள், குட்டைகள் என நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்படும்  குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரி, குளம், ஊரணி, குட்டை உள்ளிட்ட நீர் நிலைகளை தூர் வாருவதற்கு ரூ.1250 கோடி நிதி ஒதுக்கிய ஒரே அரசு இந்த அரசு தான்.

*ரூ.1 லட்சம் வரை சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

*சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் ஏழை மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை எந்த விதத்திலும் நிராகரிக்க கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*பாஜகவுடன் கூட்டணி வைத்து 5 மாத‌த்தில் 6 மருத்துக்கல்லூரிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளது.இவற்றின் மூலம் 900 புதிய மருத்துவர்கள் உருவாக முடியும்.

*கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைக்கும் திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

*தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம். மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம்.

*தாமிரபரணி-நம்பியாறு-கருமேணி ஆறுகள் இணைப்பு திட்டம் 2020 டிசம்பர் 20ம் தேதி செயல்படுத்தப்படும். தாமிரபரணி குறுக்கே 3 இடங்களில் ரூ.100 கோடி செலவில் தடுப்பு அணைகள் அமைக்கப்படும்.

*மதுரை தோப்பூரில் ரூ.1500 கோடி செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

*தமிழகத்தில் மொத்தம் அமையும் 37 மாவட்டங்களில் 17 மாவட்டங்கள் அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டவை.

Tags : speech ,districts ,Principal ,AIADMK ,Tamil Nadu ,Palanisamy , Chief Minister, Edappadi Palanisamy, Tenkasi, Paddy, Paddy, Arun Sundar Dayan, Ministers
× RELATED ராஜஸ்தான் பிரசாரத்தில் வெறுப்பு...